தஞ்சை மாவட்டம் அரிசிற்கரைப்புத்தூர் படிக்காசுநாதர் கோயில்: பணக்கஷ்டம் தீர்க்கும் தலம்!

Spread the love

சோழநாட்டுக் காவிரிக்கரைத் தலங்களுள் ஒன்று அரிசிற்கரைப்புத்தூர். இத்தலத்தின் புராணப் பெயர் அழகாப்புத்தூர். தேவாரப் பாடல்பெற்ற இந்தத்தலத்தில்தான் புகழ்த்துணை நாயனாருக்குப் படிக்காசு தந்து இறைவன் ஆட்கொண்டார் என்கிற்து தலபுராணம். வாருங்கள் அந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம்.

சுயம்புத் திருமேனியினராக அருள்பாலிக்கும் இத்தல ஈசனின் திருநாமம் படிக்காசுநாதர். அம்பாள் திருப்பெயர் அழகம்மை என்கிற செளந்தர்யநாயகி. புராணக் காலத்தில் மகாலட்சுமி தங்கியிருந்து சிவபூஜை செய்த தலமாகையால், `சுவர்ண புரி’ என்று அழைக்கப்பட்ட க்ஷேத்திரம் இது.

மேலும், இந்தத் தலத்துக்கு உரிய பிள்ளையாரும் சுவர்ண விநாயகர் எனும் திருப்பெயரோடு அருள்பாலிப்பது விசேஷம். முன்பொரு காலம், இந்தத் தலத்தில் வாழ்ந்திருந்த சிவாசார்யர் ஒருவர், தினமும் அரசலாற்றில் இருந்து நீர் கொணர்ந்து சுவர்ண புரீசரை பூஜை செய்வார்.

ஒருமுறை, இந்தப் பகுதி முழுவதும் கடுமையான பஞ்சம் நிலவியது. அளவுக்கு மீறிய வறுமையால் பல நாள்கள் உணவின்றி சோர்வுற்றிருந்த அவர், ஒருநாள் தீர்த்தக் குடத்துடன் மயக்கமுற்று கருவறையிலேயே விழுந்துவிட்டார்.

படிக்காசுநாதர்
படிக்காசுநாதர்

உணவின்றி வாடிய நிலையிலும் சிவ கைங்கர்யத்தினை விடாது செய்து வந்த அவரின் பக்திக்கு இரங்கிய பரமன், தினமும் ஒரு படிக்காசு அளிப்பதாகச் சொல்லி அருள்பாலித்தார். ஈசன் அளித்த படிக்காசினை தினமும் பெற்று இப்பகுதி மக்களின் பசியைப் போக்கி பஞ்சத்தினை ஒழித்தார் அர்ச்சகர்.‌

இந்தச் சிவாசார்யர்தான் பின்னாளில் புகழ்த்துணை நாயனார் என்கிற பெயரால் புகழ்பெற்று முக்தியடைந்தார். அவரின் சந்ததிகளே இன்றளவும் இந்த ஆலயத்தில் பூஜிக்கும் உரிமை உடையவர்களாக இருக்கின்றனர்.

புகழ்த்துணை நாயனார் மற்றும் அவருடைய மனைவி லட்சுமி அம்மையார் இருவரும், மகா மண்டபத்தின் பக்கவாட்டுத் திண்ணையில் தனித்தத் திருமேனிகள் தாங்கிக் காட்சி தருகின்றனர். ஆவணி மாத ஆயில்ய நட்சத்திர நாளில் இந்த நாயனாருக்கான குருபூஜை நடைபெறுகிறது.

வேண்டுதலுடன் கோயிலுக்கு வரும் அன்பர்கள், இரண்டு புதிய நாணயங்களைக் கொண்டுவந்து படிக்காசுநாதர் சந்நிதியில் சமர்ப்பித்து மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். இரண்டில் ஒன்றை கோயிலுக்கு அளித்துவிட்டு மற்றொன்றை வீட்டிற்குக் கொண்டுவந்து பூஜையில் வைத்துவிட வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் குடும்பத்தில் சகல செளபாக்கியமும் – லட்சுமி கடாட்சமும் நிலைத்திடும் என்பது ஐதிகம்.‌ வருமானம் இல்லாமல் கடன் மற்றும் பணப்பிரச்னையில் தவிப்பவர்கள், இத்தகு பிரார்த்தனையை இங்கு வந்து செய்வது இங்கு வழக்கமாக உள்ளது.

சங்கு சக்கரம் தாங்கிய சண்முகர்
சங்கு சக்கரம் தாங்கிய சண்முகர்

திருமணப் பாக்கியம் அருளிடும் கல்யாண சண்முகர்!

இத்தல முருகன் சங்கு சக்கரத்தோடு காட்சி அருள்வது விசேஷம். திருமால் தமக்குரிய சங்கு – சக்கரத்தினை முருகப் பெருமானுக்கு இத்தலத்தில் அளித்தார் என்கிறது தலபுராணம். மேலும் இங்கே முருகப்பெருமான் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதும் கூடுதல் விசேஷம். எனவே இத்தலத்தில் முருகனை வேண்டிக்கொண்டால் திருமண வரம் நிச்சயம் என்கிறார்கள்.

செய்த தவறினை உணர்ந்து மனதார இத்தலத்தில் வழிபடுபவர்களுக்குப் பாப விமோசனம் கிடைக்கும் என்கிறது ஸ்தல புராணம். மேலும், தந்தையின் மனம் வருந்தும்படி நடந்து கொண்டவர்களும், இங்கு வந்து வழிபட்டு மனநிம்மதியும் மன அமைதியும் பெறலாம் என்கிறார்கள்.

இந்த முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு, அவர் சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் கல்யாண மாலையை வாங்கி வந்து, வீட்டில் வைத்தால், கல்யாணமாலை சீக்கிரமே உரியவர் கழுத்தில் விழுந்து விடும் என்பது ஐதிகம்.

சங்கு-சக்கரதாரியாக அருளும் இந்த முருகனை வழிபடுவோருக்கு, சாட்சாத் பெருமாளை வழிபட்ட பலன் கிடைத் திடும் என்பது கூடுதல் சிறப்பு. திருமணத்தடைகள் நீங்கிட, சஷ்டி அன்று விசேஷ அர்ச்சனை செய்வது இங்கு நடைமுறை.‌

பன்னிரண்டு கரங்களிலும் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலம், வஜ்ரம் முதலான ஆயுதங்களுடன் மேற்கரங்களில் சங்கு சக்கரம் தாங்கிய இவரை சஷ்டியன்று ஷண்முகார்ச்சனை செய்து வழிபட, எத்தகு பகைமையையும் அழித்து வெற்றி காண்பது உறுதி என்கிறார்கள்.‌

புகழ்த்துணை நாயனார்
புகழ்த்துணை நாயனார்

செவ்வாய்க்கிழமைகளில் இந்த முருகனுக்கு அபிஷேகம் செய்து, பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபட்டால், வம்சவிருத்தி ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

எப்படிச் செல்வது?: கும்பகோணத்திலிருந்து திருநறையூர்- நாச்சியார்கோவில் செல்லும் வழித்தடத்தில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அரிசிக்கரைப் புத்தூர் (அழகாப்புத்தூர்).

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *