தனுஷ், சூர்யா, SK வரிசைக்கட்டும் நடிகர்கள்….வலுப்பெறும் நற்மணி மன்றங்கள்! – Kumudam

Spread the love

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து புதிய வரலாற்றைப் படைத்தார்கள். அவர்களைத் தொடர்ந்து நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், உள்ளிட்டோர் மக்களிடம் மிகவும் பரிச்சயமானவர்களாக இருந்த நிலையில், மக்களை நம்பி அரசியல் களத்தில் இறங்கினர். ஆனால், இவர்களால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் அரசியலில் தனி இடத்தைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், இந்த வரலாற்றை மாற்றும் விதமாக, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனது நடிப்பால் கட்டிப்போட்ட விஜய், தனக்கென உருவாகியிருந்த ரசிகர்களை ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றதுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார் விஜய்.

இதன் மூலம் அரசியலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இடத்தை இதுவரை யாரும் நெருங்காத நிலையில், தற்போது விஜய் அந்த இடத்தைத் தொட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இதனால், சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை, சினிமா நடிகர்கள் மத்தியில் உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக ஒரு பேச்சு நிலவி வருகிறது.

அதன்படி, அவரும் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து நலத்திட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருவதுடன், மாவட்ட அளவிலான நிர்வாகிகளைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி, இடைக்காலத் தேர்தலைத் தவிர்த்துவிட்டு நேரடியாக 2031ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரைத் தொடர்ந்து, இந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரும் சமீபகாலமாக இடம்பெற்று வருகிறது.

சென்னை போரூர் அருகே நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் அக்,.-4ஆம் தேதி சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் பிரம்மாண்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒரே சீருடையில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு, சிவகார்த்திகேயன் அரசியல் களத்தில் ஈடுபட உள்ளாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகர் விஜய் பாணியில் சிவகார்த்திகேயனும் அரசியல் பிரவேசம் செய்யப் போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதேபோல், நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றக் கூட்டங்களை அரசியல்படுத்தி வருகிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஒருவேளை சூர்யாவும் அரசியல் பாதைக்கு வருகிறாரா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் அரசியல் வருகை குறித்த தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இப்படி நடிகர்கள் அனைவரும் தங்களது சினிமா பயணத்தைத் தாண்டி அரசியல் பயணத்திற்குத் தயாராகி வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், முன்னணி நடிகர்கள் தொடர்ந்து அரசியலுக்கு வந்தால் தமிழ்நாடு அரசியல் களம் எவ்வாறு மாறும்? தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்யின் அரசியல் பயணம் எந்த நிலைமைக்குச் செல்லும்? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *