தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது, இதில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 26-ம் தேதி) இரவு தேக்கம்பட்டி சிறையில் உள்ள 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
காவல்துறையின் விசாரணையில் கைதிகள் சிறை அதிகாரிகளை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், இதுவரை 4 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய கைதிகளைத் தேடிப் பிடிக்க காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர் வானதி சீனிவாசன் தன் எக்ஸ் பக்கத்தில், “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள். தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக நாடகமாடி, சிறைக் காவலர்களைத் தாக்கி தப்பிச் சென்றதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது!
சினிமாவையே மிஞ்சும் இந்தச் சம்பவம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் தவெக அரசு எந்த அளவுக்குத் தோல்வியடைந்திருக்கிறது என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.