“‘மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்…!” என்று எங்கள் ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தைப் பலரும் தொடர்பு கொண்டு பேசும்போது, நான் அவர்களிடம் கேட்கும் முக்கியமானதொரு கேள்வி, ”எத்தனை ஆண்டுகளுக்கு உங்கள் பணத்தை நீங்கள் முதலீடு செய்துவைத்திருப்பீர்கள்?” என்பதுதான்.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஏறக்குறைய எல்லோருமே ”ஐந்து ஆண்டுகள்” என்பார்கள். ”ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்து என்ன செய்வீர்கள்?” என்று நான் அடுத்த கேள்வியைக் கேட்பேன்.
சிலர், ”அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்வேன்” என்று சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர், ”அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு ஐந்து ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்” என்பார்கள்.
எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்! சொல்லி வைத்த எல்லோருமே ஐந்து ஆண்டுகள் என்று சொல்ல என்ன காரணம்?, தமிழர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? என என் மனதில் பல கேள்விகள் வரும்.
தமிழ் முதலீட்டாளர்கள் பலரும் இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் சில விஷயங்கள் எனக்குப் புரிந்தது. அந்த விஷயங்களைப் பார்ப்போம்.

முதல் விஷயம், பங்குச் சந்தை அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பெருவாரியான தமிழ் மக்களுக்குப் புதிது என்பதால், அது பற்றி பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை. எனவே, அதன் மீது நிறைய சந்தேகம் இருக்கிறது! என்றாலும் அதில் நிறைய லாபம் கிடைக்கும் என்று பலரும் சொல்வதால், ‘கொஞ்ச பணத்தைப் போட்டுத்தான் பார்ப்போமே…’ என்று முதலீடு செய்ய வருகிறார்கள்.