தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன், சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோருடன் இணைந்து ஆளுநரை நேரில் சந்தித்து தி.மு.க சார்பில் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டது.
ஆளுநருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, “அரசுடன் எந்தவித தொடர்பும் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரு நபர்கள், அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் பெற்றவர்களாக அரசு உயர்மட்டக் கூட்டங்களிலும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் முதலமைச்சரின் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிடும் கேவலமான நிலை தமிழகத்தில் நிலவுகிறது.

இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டபோது, ‘அவர்கள் அந்த அளவுக்கு அவசியமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களை அமைச்சராக்கி இருக்க வேண்டியதுதானே?’ என்று ஆளுநரே சிரித்துக் கொண்டே கூறினார். இதன் மூலம் இந்த ஆட்சியில் நடப்பது தவறு என்பதை ஆளுநரே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.