Cricket
oi-Yogeshwaran Moorthi
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் முதல் 2 ஓவர்களில் அமைதி காத்த வைபவ் சூர்யவன்ஷி, ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்திய அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்ட நாள் முதலே, அவர் எப்போது அறிமுகம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அயர்லாந்து டி20 தொடரில் அவர் பெஞ்ச் செய்யப்பட்ட சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. இதனால் இங்கிலாந்து ஜாம்பவான்களே வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காதது ஏன் என்று கேட்க தொடங்கினர்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா – வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் ஆர்ச்சர் வீசிய 3வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து சர்வதேச கிரிக்கெட்டுக்கு தனது வருகையை வைபவ் சூர்யவன்ஷி அறிவித்தார். வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்த அடுத்த நொடி ஒட்டுமொத்த மைதானமும் அலற தொடங்கியது என்றே சொல்லலாம். இங்கிலாந்து மண்ணில் வைபவ் சூர்யவன்ஷிக்கு அதிகளவிலான ரசிகர்கள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து ஜோஷ் டங்க் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலும் வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸ் அடித்து மிரட்டினார். இதன்பின் வில் ஜாக்ஸ் வீசிய ஓவரில் அட்டாக் செய்ய முயன்று வைபவ் சூர்யவன்ஷி பந்தை தவறவிட்டு ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் அறிமுகப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 2 சிக்ஸ் உட்பட 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகர்கள் பலரும் 2 சிக்ஸ் அடித்து அமர்க்களமாக சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்துள்ளதாக பாராட்டு வருகின்றனர். எப்படியும் இந்த டி20 தொடரிலேயே வைபவ் சூர்யவன்ஷி ஒரு மாஸ் இன்னிங்ஸை ஆடிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.