இயக்குநர் இமயம் என்று தமிழ் திரையுலகால் செல்லமாக அழைக்கப்படுபவர் “பாரதிராஜா’.
1977-ம் ஆண்டு ’16 வயதினிலே’ மூலம் கோலிவுட்டில் தனது காலடியை எடுத்து வைத்தார் பாரதிராஜா. அந்த முதல் படமே அவருக்கு அப்ளாஸ்களையும், பாராட்டுகளையும் அள்ளிக்கொடுத்தது.
கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை என இவருடைய அடுத்தடுத்த படைப்புகள் அனைத்தும் சக்சஸ்தான்.
இயக்குநராக இவர் தமிழில் மட்டும் சுருங்கிவிடவில்லை. இந்தி, தெலுங்கு மொழிப் படங்களையும் இயக்கி அந்தக் காலத்திலேயே பான் இந்திய இயக்குநராக வலம் வந்தார்.
முதல் மரியாதை, கருத்தம்மா, கடல் பூக்கள் என ஆறு தேசிய விருதுகளும், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களுக்கு ஆறு தமிழ்நாடு விருதுகளும் பாரதிராஜாவின் கைதேடி வந்தன.
2004-ம் ஆண்டு பத்மஶ்ரீ விருதும் இவருக்குக் கொடுக்கப்பட்டது. சில நாடகங்களையும் இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு இவர் சிறந்த படங்களை மட்டும் தருவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை.
நடிகைகள் ராதிகா, ரேவதி, ராதா, நடிகர்கள் கார்த்திக், நிழல்கள் ரவி எனச் சிறந்த நடிகை, நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.