டெல்லியில் நடைபெற்ற இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ம.தி.மு.க தலைவர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது இந்தியாக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டியில், “காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், ஏறத்தாழ மூன்று மணி நேரம் நீடித்தது.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர். சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகளுக்குக் கூட இடம் கொடுத்துவிடாமல், “ஒற்றைப் படை வீரனைப் போல’ ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒன்றிணைந்து அடுத்தகட்டமாகச் செயல்படுவது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தியாக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடத்துவது என்றும், அதன் அடுத்த கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வாக்கில் ஹைதராபாத்தில் கூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மிக முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதலாவதாக, ‘எஸ்.ஐ.ஆர்’ (SIR) விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழக்கு தாக்கல் செய்வது என்றும், இரண்டாவதாக, லட்சோப லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் வேதனைக்குள்ளாக்கிய விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.