
சென்னை காரம்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெஞ்சமின், எம்.எல்.ஏ.க்கள் காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, திமுகவின் தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் துவண்டு போக வேண்டாம் என்றும், வரும் காலங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவின் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவராக உருவெடுப்பார் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “இன்றைக்கு வீட்டுவரி உயர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். அதைப்பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? எது விலை ஏறினால் உங்களுக்கு என்ன கவலை? ஓட்டுப்போட்டவன் நடுரோட்டுக்கு வந்து தலையில் மண்ணை அள்ளிப் போட்டால்தான் இந்த சமூகத்துக்கு புத்தி வரும்” என விமர்சித்தார்.
சென்னையில் கட்டப்பட்ட ஏசி பேருந்து நிறுத்தங்களில் தவெகவுக்கு வாக்களித்தவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர்களுக்கு திமுகவின் வரலாற்றை எடுத்துச் சொன்னால்தான் உண்மை புரியும் என்றும் கூறினார்.
மேலும், திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மா.சுப்பிரமணியன் கொண்டு வந்த மருத்துவமனை ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். அந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளின் உறவினர்கள் தவெகவுக்கு வாக்களித்ததாகவும், அவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தையும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திமுகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
“இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம். கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள். ஐந்து ஆண்டுகள் ஓய்வெடுப்போம்” என்றும் அவர் கூறினார். தண்ணீர் வரவில்லை, விளக்குகள் எரியவில்லை என மக்கள் புகார் கூறுவதாகவும், இதுபோன்ற புகார்கள் வந்துகொண்டே இருக்கட்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதனிடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் செய்த பணிகளைப் போல வேறு யாரும் செய்யவில்லை என்றும், பலமுறை ஆட்சியில் இல்லாமல் இருந்த அனுபவம் திமுகவுக்கு இருப்பதால் தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வலிமை தங்களுக்கு இருப்பதாகவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களின் உயிரிழப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் ஆர்.எஸ்.பாரதி பேசியதாகக் கூறப்படும் இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.