பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம், சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களுக்கு ஆர்.டி.ஐ. சட்டத்தில் விலக்கு, செய்யாறு மேல்மா சிப்காட் நில எடுப்பு அறிவிக்கை, கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பான சுற்றறிக்கை என வெவ்வேறு விவகாரங்களில் முதலில் அறிவிப்பு வெளியானதும், பின்னர் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, “அரசாணை போடுற வேகத்துல… வாபஸ் வாங்குற வேகமும் இருக்கே!” என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
திரும்பப்பெறப்பட்ட அரசாணைகள்:
ஜோதிடர் நியமனம்… 24 மணி நேரத்துக்குள் வாபஸ்!
மே மாதம், முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு பணி அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த நியமனம் தொடர்பாக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த நியமன உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. நியமனம் வெளியான மறுநாளே உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அரசாணை வெளியான வேகம்… வாபஸ் பெறப்பட்ட வேகம்… இரண்டுமே அப்போது பேசுபொருளானது.
இடதுசாரிகள் கணக்கெடுப்பு… அதிகாரி மாற்றம்!
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது.
இதையடுத்து, அந்த வட்டாட்சியர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். அதாவது, ‘இடதுசாரிகள் கணக்கெடுப்பு’ விவகாரத்திலும் ஆரம்ப நடவடிக்கைக்கு பின்னர் அரசு தரப்பில் மாற்றம் ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டம்… சுற்றறிக்கைக்கும் ‘பிரேக்’!
அடுத்ததாக கல்லூரி மாணவர்கள். இடதுசாரி கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த சுற்றறிக்கை வெளியானதும் விவாதம் வெடித்தது. இதையடுத்து, அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.
ஒருபக்கம் மாணவர் போராட்டம் தொடர்பான கட்டுப்பாடு…மறுபக்கம், அதற்கான சுற்றறிக்கையே வாபஸ்!
தூய்மைப் பணி… டெண்டருக்கும் ‘கேன்சல்’!
சென்னை தவிர்த்து 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகர்களைத் தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கு தூய்மைப் பணியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், அந்த டெண்டரையே தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
மேல்மா சிப்காட்… ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் விவகாரம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமார் 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு விவசாயிகள் தரப்பில் நீண்டகாலமாக எதிர்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிக்கை திரும்பப் பெறப்பட்டது. சிப்காட் திட்டம் தொடர்பான நில எடுப்பு விவகாரத்திலும் இப்படியொரு ‘வாபஸ்’ திருப்பம் ஏற்பட்டது.
காலை உணவுத் திட்டம்… ஆசிரியர்கள் தலையில் செலவா?
பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்டத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. சமையலறை, மின்விளக்கு, குடிநீர், இருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
சொத்து வரி உயர்வு… பழைய நிலைக்கே திரும்பியது!
சென்னை மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி மதிப்பீடு மற்றும் உயர்வு தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. மக்கள் தரப்பில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில், உயர்த்தப்பட்ட சொத்து வரி விகிதத்தைத் திரும்பப் பெற்று, பழைய விகிதமே தொடரும் என அரசு அறிவித்தது. ஏற்கெனவே கூடுதல் தொகையைச் செலுத்தியவர்களுக்கு, அந்தத் தொகை அடுத்தடுத்த வரித் தவணைகளில் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
RTI… காலை அரசாணை, மதியம் வாபஸ்!
இந்த வரிசையில் தற்போது மிகவும் சமீபத்திய விவகாரம்… RTI. செப்டம்பர் 27 காலை, பொது சட்டம்-ஒழுங்கு துறை தொடர்பான சில தகவல்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கிச் சூடு, சமூக மற்றும் சாதிய மோதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான தகவல்களை RTI மூலம் பெறுவதில் கட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில் அந்த உத்தரவு இருந்தது. அரசாணை வெளியான சில மணி நேரங்களிலேயே பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவல்களுக்கு அளிக்கப்பட்ட RTI விலக்கு அரசால் திரும்பப் பெறப்பட்டது. இதற்கு பின்னால், கரூர் துயரம் ஓராண்டு நினைவு நாளை மறைக்கவே, இப்படி ஒரு அரசாணையை வெளியிட்டு, மக்களை திசை திருப்ப முயற்சி நடந்தது என்று திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது.
வெளியே வராதவை… ‘சீக்ரெட் ஃபைல்’ பக்கமும் உண்டு!
வெளியே வந்து சர்ச்சையான பிறகு திரும்பப் பெறப்பட்ட உத்தரவுகள் ஒரு பக்கம் என்றால், இதுவரை முழுமையாக வெளிப்படாத சில விஷயங்களும் அரசு நிர்வாகம் தொடர்பான விவாதங்களில் இடம்பெற்று வருகின்றன.
முதலமைச்சரின் தனிச் செயலர்கள் நியமனம்!
முதலமைச்சரின் முதலமைச்சரின் தனிச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பான அரசாணைகள் வெளியாவதற்கு முன்பே அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பேசப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த நியமனங்கள் தொடர்பான முழுமையான அரசாணைகள் அல்லது விவரங்கள் பொதுவெளியில் தெளிவாகக் கிடைக்காதது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.
சென்னை விமான நிலைய விவகாரம்… பிரதமருக்கு கடிதமா?
சென்னை விமான நிலையம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்கு முதலமைச்சர் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அதில் சில முக்கிய கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தக் கடிதத்தின் முழு விவரங்கள் பொதுவெளியில் வெளியாகவில்லை. இதனால், “அப்படி ஒரு கடிதம் அனுப்பப்பட்டதா? அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது?” என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
கனிமவள மசோதா… பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்?
இதேபோல், கனிமவள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் பரவின. அந்தக் கடிதத்தில் மத்திய அரசின் மசோதா தொடர்பான தமிழ்நாட்டின் எதிர்ப்புகளும், மாநில உரிமைகள் குறித்த கருத்துகளும் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடிதத்தின் முழுமையான உள்ளடக்கம் பொதுவெளியில் வெளியாகவில்லை.
இப்படி ஒருபக்கம் வெளியிடப்பட்ட உத்தரவுகள் அடுத்தடுத்து வாபஸ் பெறப்படுவது பேசுபொருளாக, இன்னொரு பக்கம் சில முக்கிய நியமனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதங்கள் பொதுவெளியில் முழுமையாக வெளியாகாததும் விவாதமாகி வருகிறது.
“வெளியே வந்தால் வாபஸ்… வெளியே வராதது என்ன?” என்ற கேள்விதான் இப்போது சமூக வலைதளங்களில் ஓடுகிறது.
PENDING-ல் ரூ.1,200 கோடி தலைமைச் செயலகம்…!
சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், திட்டமிடப்பட்டுள்ள பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்ற எதிர்ப்புகள் எழுந்தன. படகு நிறுத்துதல் உள்ளிட்ட பாரம்பரிய பயன்பாடுகள் பாதிக்கப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் திட்டம் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில், பட்டினப்பாக்கம் திட்டத்துக்கான அரசாணை ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இதனால் அறிவிக்கப்பட்ட திட்டம் தொடர்பாகவே மீண்டும் விவாதம் உருவானது.
அறிவிப்புக்கு முன்பா… எதிர்ப்புக்குப் பிறகா?
இந்த தொடர் நிகழ்வுகள்தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு திட்டம் அல்லது உத்தரவு வெளியிடப்படுவதற்கு முன்பே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டுமா என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.
அதே நேரத்தில், மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்புகள் மற்றும் கருத்துகளை கருத்தில் கொண்டு அரசு தனது முடிவுகளை மாற்றிக்கொள்வது நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், நெட்டிசன்களின் மீம்ஸ் உலகத்துக்கு மட்டும் வேறு கணக்கு. “முதலில் அரசாணை… அடுத்து எதிர்ப்பு… அதன்பிறகு வாபஸ்!” என்று வரிசை போட்டு, “இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே!” என கலாய்த்து வருகின்றனர்.

