தவெக எம்.எல்.ஏ பேச்சைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்.. அதிரடியில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி! | AIADMK to Hold Madurai Protest on Sept 3 Against TVK MLA’s Jallikattu Remarks

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

மதுரை: ‘ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கிறது’ என்ற தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் பேச்சைக் கண்டித்து செப்டம்பர் 3 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது அதிமுக. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அண்மையில் சட்டசபையில் பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா, “சோழவந்தானில் அரசு கல்லூரி வேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க வேண்டும். சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க வேண்டும். சோழவந்தான் தொகுதியில் உள்ள அத்தனை கண்மாய்களையும் தூர்வார வேண்டும். இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” எனப் பேசினார்.

AIADMK to Hold Madurai Protest on Sept 3 Against TVK MLA s Jallikattu Remarks

இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ‘ஜல்லிக்கட்டு போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று அநாகரீகமாக கொச்சைப்படுத்திப் பேசி இருக்கின்ற சோழவந்தான் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரையும், த.வெ.க. அரசையும் கண்டித்து, மதுரையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஆட்சியில் அமர்ந்த ரீல்ஸ் மாடல் த.வெ.க அரசு, மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு பதிலாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகிறது. இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

அந்த வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சோழவந்தான் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் M.V. கருப்பையா, தமிழர்களுடைய பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின், நாகரீகத்தின், வீரத்தின் அடையாளமான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டி இளைஞர்களை சீரழிக்கிறது என்று அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசியிருப்பது இளைஞர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் மிகுந்த கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. த.வெ.க-வினர் இதுபோன்று தான்தோன்றித்தனமாக பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான அரசியல் மற்றும் சட்டப் போராட்ட வரலாறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முற்றிலுமாகத் தடை விதித்தது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தோடு கலந்தது என்பதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததோடு, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, 2017 ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறப் போராட்டத்தை நடத்தினர். அப்போதைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு, போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் ஒப்புதலுடன் 21.1.2017 அன்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்மூலம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அவசர சட்டத்தைத் தொடர்ந்து, எனது தலைமையிலான அரசு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு நிரந்தரச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல; அது தமிழர்களின் கலாச்சார பாரம்பரியம் என சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.

2017-ஆம் ஆண்டு கழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து விலங்கு நல அமைப்புகள் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், 18.5.2023 அன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும், ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்கலாம் என்றும் இறுதித் தீர்ப்பு அளித்தது. இவ்வாறு ஜல்லிக்கட்டுப் போட்டி தடையின்றி நடைபெறுவதற்கு, கழக அரசு மேற்கொண்ட சட்டப் போராட்டங்களே காரணம் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்நிலையில், ‘தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி, இளைஞர்களை சீரழிக்கிறது’ என்று தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் அநாகரீகமாக, கொச்சைப்படுத்திப் பேசிய சோழவந்தான் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினரையும், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க அரசையும் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில், 3.9.2026 வியாழக் கிழமை காலை 9.30 மணியளவில் ‘அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில்’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *