மீண்டும் உருவான பேரழிவு ஏரி.. நேபாளத்தை சூழும் அடுத்த ஆபத்து.. பொதுமக்கள் திக்திக்! | Nepal Flood: Death Toll Reaches 768, Over 3,000 Missing in Disaster, What happened in Tibet border

Spread the love

International

oi-Vigneshkumar

காத்மாண்டு: நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேபாளம் மற்றும் திபெத் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்களின்படி இதுவரை 768 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நேபாள வெள்ளம் தொடர்பான தகவல்களை நாம் பார்க்கலாம்!

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பல பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அங்குள்ள மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

nepal nepal flood flood

நேபாள வெள்ளம்

இந்த வெள்ளத்தால் நேபாளத்தில் மட்டும் 752 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 592 வெளிநாட்டினர் உட்பட 2,502 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த வெள்ளம் நேபாளம் மட்டுமின்றி சீனாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தில் 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களில் 261 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடினம்

திபெத் பகுதியில் பல கிராமங்கள் உள்ளது. மேலும், அங்கு வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் இருப்பதால், பேரழிவின் முழுமையான பாதிப்பை மதிப்பிடுவது கடினமாகியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளில் உள்ள பல நீர்மின் திட்டங்களின் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

திரிசூலி நீர்மின் திட்டத்தில் உள்ள ஒரு சுரங்கத்துக்குள் நேபாள ராணுவம் சனிக்கிழமை இரவு குழாய் மூலம் காற்றை அனுப்பும் பணியை தொடங்கியது. எனினும், இரவு பெய்த மழை மற்றும் ஆற்றில் திடீரென அதிகரித்த நீர் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இந்தியா 11 பேர் கொண்ட சிறப்பு குழுவை அனுப்பியுள்ளது. சீனாவும் 9 பேர் கொண்ட சுரங்க மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.

புதிய தடுப்பு ஏரி

இதற்கிடையே திபெத் எல்லை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து புதிய தடுப்பு ஏரி ஒன்று உருவாகி வருவது மீட்புப் பணிகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளமும் கூட இதுபோல உருவான திடீர் ஏரி உடைந்ததால் ஏற்பட்டது தான். இப்போது மீண்டும் அதேபோல ஒரு ஏரி உருவாகியுள்ள நிலையில், அது எப்போது உடையும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் இருந்த மீட்பு பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கான நேபாளத்தின் மறுகட்டமைப்பு செலவு பல பில்லியன் டாலர்களை எட்டக்கூடும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் தெரிவித்துள்ளார். சேதம் மற்றும் இழப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சர்வதேச நாடுகளின் உதவியை நாட உள்ளதாக அவர் கூறினார். மீட்பு மையங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். இதற்கிடையே வெள்ளத்தில் காணாமல் போன ஆஸ்திரேலியாவை சேர்ந்த 24 வயது காரா செவெரினோ பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.

பேரழிவுகள் அதிகரிக்கும்

இந்த திடீர் வெள்ளத்திற்கான காரணம் குறித்து ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இமயமலையில் காலநிலை மாற்றத்தால் இதுபோன்ற பேரழிவுகள் அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். பனிப்பாறை சரிவால் பனி, பாறைகள் மற்றும் நீர் கலந்த நீரோட்டம் உருவாகி பேரழிவை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். லிருங் சிகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள பனிப்பாறை உடைந்ததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த பேரழிவால் நேபாளத்தில் 93,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருக்கலாம் என செஞ்சிலுவை சங்கம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், மலேசியாவும் சிறப்பு மீட்புக் குழுவை அனுப்புவதுடன், நேபாளத்திற்கு 1 மில்லியன் டாலர் உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *