தவெக கூட்டணிக்கு பெயர் வைத்த பிரவீன் சக்கரவர்த்தி: “அதிக பிரசங்கித்தனம்”  என மா.கம்யூ விமர்சனம் – Kumudam

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் 2 ராஜ்யசபா  சீட் காலியானது. சட்டமன்றத்தில் அதிக எம்எல்ஏக்களை கொண்ட ஆளும் தவெகவை ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் ராஜ்யசபா எம்பி பதவிக்கான இடத்தை தவெக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகம்+ காங்கிரஸ்+விடுதலைச் சிறுத்தைகள் கட்சி+ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் + இந்திய கம்யூனிஸ்ட் கட்சி+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். 

என் மீது நம்பிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த பதிவு “அதிக பிரசங்கித்தனம்”  என மா.கம்யூ கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.

கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.  பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை “அதிக பிரசங்கித்தனம்” என்று தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *