புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு வெளிமாநில ஆண்களை திருமணம் செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது. அதேசமயம் தந்தையின் இருப்பிடத்தைத் அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு இடம்பெயர்ந்தவர் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
அதனால் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் அந்தப் பெண்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் இட ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் என 26 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு கடந்த 27-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதச் சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, `இந்தியச் சமூகம் பாரம்பர்யமாகத் தந்தைவழி அமைப்பைக் கொண்டது. அதனால் சாதி மற்றும் சமூக நிலை தந்தையின் வழியிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்” என்று வாதிட்ட புதுச்சேரி அரசு, “ஒரு மாநிலத்தில் இடஒதுக்கீடு பெறத் தகுதியுள்ள ஒருவர் மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயரும்போது, அதே சலுகையைக் கோர முடியாது’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களையும் சுட்டிக்காட்டி பூர்வீகச் சான்றிதழை தர முடியாது என்று மறுத்தது.
அதேசமயம் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, `தந்தை வழியில் மட்டுமே சாதிச் சான்றிதழ் தரப்படும் என்று கூறுவது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 16 வழங்கும் பாலினச் சமத்துவத்திற்கு எதிரானது.