குரலில் கரகரப்பு இருப்பது அல்லது குரல் மாற்றம் இருப்பதுதான் தொண்டைப் புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சாதாரண சளி, வைரஸ் காய்ச்சல் (Viral fever) அல்லது இருமலில்கூட நம்மால் பார்க்க முடியும். அதனால் எல்லாவிதமான குரல் மாற்றமும், குரல் கரகரப்பும் புற்றுநோயாக இருக்குமோ என்று சந்தேகப்படவோ, பயப்படவோ தோவையில்லை.
காய்ச்சல் போன்ற வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் வரும் குரல் கரகரப்போ அல்லது குரல் மாற்றமோ சந்தேகத்துக்குரியவை. அந்த அறிகுறிகள் திடீரென்று தொடங்கி, படிப்படியாகத் தீவிரமடைந்து (worsen), மருந்துகள் எடுத்தும், தொடர்ச்சியாக 2 முதல் 3 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை எடுத்தும் சரியாகாமல் இருந்தால், அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

அடுத்து, விழுங்குவதில் ஏதேனும் தொந்தரவு இருப்பதும் இன்னொரு முக்கியமான அறிகுறி. விழுங்கும்போது அடைப்பது போன்றோ அல்லது தொண்டையில் ஏதோ உட்கார்ந்து கொண்டு இருப்பது போன்றோ தொந்தரவு இருக்கலாம். இது தவிர, கழுத்தில் நெறிகட்டுதல் அல்லது ஏதேனும் வீக்கம் இருந்தால், அதுவும் இதற்கான அறிகுறியாக இருக்கும்.
எனவே, ஏற்கெனவே சொன்ன மாதிரி எல்லாவிதமான குரல் கரகரப்பும் குரல் மாற்றமும் புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், எந்தவொரு தொந்தரவும் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல், எல்லா சிகிச்சையும் எடுத்தும் அப்படியே இருக்கிறது என்றால், அதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மிக முக்கியமாக, புகை பிடிக்கும் பழக்கம் (Chronic smoker) உள்ளவர்கள் இந்த அறிகுறிகளை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால், தொண்டைப் புற்றுநோய்க்கு புகை பிடித்தல் மிக முக்கியமான காரணி என்பதால், அந்தப் பழக்கம் உள்ளவர்கள், மற்றவர்களைவிடவும் அதிக எச்சரிக்கையோடு இதை அணுக வேண்டும்.
டாக்டர் மதுப்ரியா:
சென்னை, வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவராகப் பணிபுரிகிறார். இந்தத் துறையில் 10 வருடங்களுக்கும் மேலான அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.