திடீரென மாறிமாறி தாக்கும் ஈரான் – அமெரிக்கா.. இப்போது என்ன பிரச்சனை? சிக்கிய 11 இந்தியர்கள் | Iran VS US: What exactly is the problem between both countries today? Why do the two nations keep attacking each other?

Spread the love

International

oi-Nantha Kumar R

டெஹ்ரான்: இன்று காலை முதல் அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறி தாக்கி கொள்கின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்த பிறகு அந்த இருநாடுகளும் 3வது முறையாக இன்று மோதி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த இருநாடுகளுக்கும் இடையே இப்போது என்ன தான் பிரச்சனை? இந்த பிரச்சனையில் இந்தியர்கள் 11 பேர் சிக்கியது எப்படி? என்பது பற்றிய புரியும்படி பார்க்கலாம்.

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. இந்த போர் தற்காலிக ஒப்பந்தம் மூலமாக முடிவுக்கு வந்தது. ஈரான் – அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தது.

iran-vs-us-what-exactly-is-the-problem-between-both-countries-today-why-do-the-two-nations-keep-at

ஆனால் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் கோபமான அமெரிக்கா, ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது என்று கூறி அந்த நாட்டை 2 முறை தாக்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது நமக்கு தெரியும். அதன்பிறகு இருநாடுகளும் அமைதியாகின.

இதனால் இனி மோதல் நடக்காது என்று நினைத்த நிலையில் இன்று காலை முதல் இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றன. ஈரானின் 140 இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானில் உள்ள போர் விமானங்களை கண்காணிக்கும் ரேடார் அமைப்புகள், ஏவுகணை சேமிப்பு குடோன்கள், ட்ரோன் சேமிப்பு குடோன்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அனுப்ப பயன்படும் தளங்கள் மற்றும் சரக்கு கப்பல்களை தாக்க ஈரான் பயன்படுத்தும் இடங்கள் உள்பட 140 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா ‘அட்டாக்’ செய்தது.

இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தொடங்கியது. அதன்படி கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட அமெரிக்காவின நட்பு நாடுகளை குறிவைத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை தொடங்கியது. இந்த நாடுகளின் அமெரிக்காவின் ராணுவ, விமான மற்றும் கடற்படை தளங்கள் உள்ளதால் ஈரான் அதனை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் இன்றைய மோதலுக்கு என்ன காரணம்? என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான விடையை தருகிறோம். அதாவது ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஓமன் கடல் பகுதியில் ‘சைப்ரஸ்’ நாட்டின் கொடியுடன் இன்று காலையில் எம்/வி ஜிஎஃப்எஸ் கேலக்ஸி எனும் வர்த்தக கப்பல் பயணித்தது. இந்த கப்பலில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. இந்தியர்கள் 11 பேர் பயணித்த நிலையில் அவர்கள் சிக்கி தவித்தனர். இது ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றத்தை உருவாக்கியது.

இதற்கிடையே தான் ஈரானின் புரட்சிகர காவல் படை சார்பில் ”ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை சுற்றிய அனுமதிக்கப்படாத பாதையில் கப்பல்கள் செல்கின்றன. எங்களின் எச்சரிக்கையையும் மீறி அனுமதிக்கப்படாத பாதையில் கப்பல்கள் பயணித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கப்பலை எச்சரித்து தாக்குதல் நடத்தினோம். இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுகிறோம். மறுஅறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இருக்கும்” என்று அறிவித்தது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஏற்கனவே அமெரிக்கா அறிவித்து இருந்தது. இதனால் இன்றைய தாக்குதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக வெளியிட்ட அறிவிப்பால் கோபமான அமெரிக்கா உடனடியாக ஈரானில் 140 இடங்களை குறிவைத்து தாக்கியது.

பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா கோபமடைந்தது. அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் தாங்காத அமெரிக்கா, ஈரான் மீது புதிய தாக்குதலை தொடங்கிய நிலையில் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த மோதலுக்கு தொடக்கப்புள்ளி என்பது’சைப்ரஸ்’ நாட்டு கொடியுடன் பயணித்த கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தான். இந்த தாக்குதலில் அந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. இந்த கப்பலில் 11 இந்தியர்கள் இருந்தனர். இதில் 10 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் மாயமாகி உள்ளார். இதனால் மத்திய வெளியுறவுத்துறை கடும் கோபமடைந்துள்ளது. ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று காலையில் ஓமன் கடலுக்கு அப்பால் பயணித்த ஜஎஃப்எஸ் கேலக்ஸி எனும் வர்த்தக கப்பல் மீதான தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த கப்பலில் 11 இந்தியர்கள் பயணித்தனர். இதில் தற்போது வரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் மிஸ்ஸாகி உள்ளார்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *