Tamilnadu
oi-Halley Karthik
தென்காசி: தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்களை எழுந்து வரும் நிலையில், தென்காசியில் ஆணவக்கொலை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(22). இவர் இதே பகுதியை சேர்ந்த சுஷ்மிதா (20) எனும் இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த காதல் விவகாரம் சுஷ்மிதா வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு இடைநிலை சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், சுஷ்மிதாவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இந்த உலகத்தில் உயிர்கள் உருவாக காலம்.. அதாவது கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பே காதல் உருவாகிவிட்டது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான சாதி, இந்த காதலை தடுத்துவிடுமா என்ன? எனவே சுஷ்மிதா, ஆகாஷ் காதல் இன்னும் வலுவானது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்று திருமணம் செய்துக்கொண்டனர்.
தென்காசி பாவூர்சத்திரம் பகுதியில் நெல்லி தோப்பில் ஆகாஷ் வேலைக்கு சேர்ந்தார். இதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு இருவதும் குடும்பம் நடத்தி வந்தனர். 3 மாதம் கடந்த நிலையில், சுஷ்மிதாவின் அப்பா முருகன் (52) உள்ளே வருகிறார். அடிக்கடி சுஷ்மிதாவை வந்து பார்த்துவிட்டு செல்கிறார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வந்து தந்துவிட்டு போகிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருவரின் நம்பிக்கையையும் முருகன் பெறுகிறார்.
இப்படி இருக்கையில் செப்.10 அன்று இரவு 9.45 மணிக்கு ஆகாஷ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார். அவரை தொடர்ந்து இரவு 10 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஆகாஷை சரமாரியாக தாக்குகிறார். இதை பார்த்து சுஷ்மிதா கூச்சலிட.. அக்கம் பக்கத்தினர் வந்து ஆகாஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
தற்போது ஆகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சியில் ஈடுபட்ட முருகனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டதால், 3 மாதம் காத்திருந்து பெண்ணின் தந்தை பழிவாங்கியிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தென் மாநிலங்களில் சாதிய ஆணவ படுகொலைகள் ரொம்பவும் இயல்பானதாக மாறி வருகின்றன. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண, சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதிரான தனி சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். விஜய் தலைமையிலான தவெக அரசு இந்த கோரிக்கையை ஏற்று தனி சட்டம் இயற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.