Tamilnadu
oi-Pavithra Mani
செங்கல்பட்டு: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக, அதிமுக நல்ல ஆட்சியை வழங்கின என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு அவர் பாராட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு எல்லா ஆட்சியிலும் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள். திறமையாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் அல்லது திறமையாக பணியாற்றி ஓய்வு பெற்ற துறை செயலாளர்களை ஆலோசகர்களாக நியமிப்பார்கள். அவர்களுக்கு அரசு நிர்வாகத்தில் பல ஆண்டுகள் அனுபவம் இருக்கும். அரசுக்கு எப்படி ஆலோசனை கொடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.

அரசுக்கு ஆலோசனை
அதன்படி அரசும் தக்க நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கும். தவெக ஆட்சியில் ஒரு ஜோதிடரை அரசு ஆலோசகராக நியமிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் முதலமைச்சருக்கு உதவியாக இருந்தவர்களை எல்லாம் ஆலோசகராக நியமித்துள்ளனர். தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோரை நியமித்துள்ளனர். இன்னொருத்தர் பெயர் தெரியவில்லை. இந்த மூன்று பேர் தான் அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.
எப்படி சிறப்பாக இருக்கும்
ஒரு துறையை சேர்ந்த அதிகாரியாக இருந்தால், அவருக்கு எந்த இடத்தில் என்ன தேவை என்பதை அறிவார். அதற்கேற்ப ஆலோசனை வழங்குவார். இது கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும், எனக்கும் தெரியும். அப்படித்தான் அதிகாரிகளை நியமித்து ஒரு நல்ல அரசாங்கமாக செயல்பட்டது. திமுக ஆட்சியும் சரி, அதிமுக ஆட்சியும் சரி அப்படித்தான் நல்ல அரசாங்கமா செயல்பட்டது. இந்த அரசாங்கத்தில் ஜோதிடர்களையும், தேர்தல் வியூக வகுப்பாளரையும் ஆலோசராக நியமித்தால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்.
டப்பாவான ஜனநாயகன்
ஜனநாயகன் படத்தை ஒருவர் தயாரித்தார். அதை பெரிதாக எதிர்பார்த்தனர். அந்தப் படம் டப்பாவாகிவிட்டது. ஜனநாயகன் வந்தால் நாடே அவர் பக்கம் திரும்பிவிடும் என எதிர்பார்த்தனர். ஒரு வாரம் கூட ஓடவில்லை. காற்று தான் வாங்கியது. அந்த படத்தின் தயாரிப்பாளரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்துள்ளார். நாடு உருப்படுமா. கேட்டால் தமிழகத்திற்கும், டெல்லிக்கும் அவர் பாலமாக இருப்பாராம். தமிழகத்தின் பிரச்சனைகளை டெல்லியில் சொல்வது தான் அவரின் பணி. விஜய் அவரின் மேக் அப் மேனையும் கூட்டு செல்வார். அடுத்த நாள் அவருக்கும் பதவி வழங்குவார்” என்றார்.

