'திமுக ஆதரவோடு முதலமைச்சராகலாம் என்றார் பழனிசாமி, பேரதிர்ச்சி; அதிமுக ஆதரவு.!' – சி.வி.சண்முகம்

Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ‘மூன்றாவது’ இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், எழுந்த புகைச்சலில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு குழு என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது.

இதையொட்டி, இன்று சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது…

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்தத் தேர்தலிலே தோல்வி அடைந்திருக்கிறது. அந்தத் தோல்வியை நாங்கள் முழுமையாக, மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறோம்.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

இன்றைய நிலையில், இந்த மாபெரும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும், நிலைநிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோருடைய ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதியாக உள்ளோம்.

நடந்து முடிந்த இந்தச் சட்டமன்றத் தேர்தலிலே, தமிழக மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், குறிப்பாக அதன் தலைவர் மாண்புமிகு விஜய் அவர்களுக்கும் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.

அவர் முதலமைச்சராக வர வேண்டும் என்று மக்கள் விரும்பி வாக்களித்த அந்தத் தீர்ப்பை அதிமுக தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறது.

தேர்தலுக்குப் பின் நாங்கள் கலந்தாலோசித்த போது, கழகத்தினுடைய பொதுச் செயலாளர் சில முன்மொழிவுகளை எங்களிடம் வைத்தார்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதே திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துத்தான். கடந்த 53 ஆண்டுகளாக, இரண்டு மூன்று தலைமுறைகளாக நாங்கள் திமுகவை எதிர்த்துத்தான் அரசியல் செய்து வருகிறோம்.

ஆனால், எந்த திமுகவை நாங்கள் எதிர்த்தோமோ, அதே திமுகவின் ஆதரவோடு முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படலாம் என்ற முன்மொழிவை பொதுச்செயலாளர் முன்வைத்தார். இதைக் கேட்டு நாங்கள் பேரதிர்ச்சிக்குள்ளானோம்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

திமுகவோடு இணைந்தால் அதிமுக என்ற இயக்கமே இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் எங்களுடைய கருத்தைச் சொன்னோம். இந்தத் தவறான முடிவை ஏற்க நாங்கள் மறுத்துவிட்டோம். எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் இந்தத் திட்டத்திற்குச் சம்மதிக்கவில்லை.

எனவே, அதிமுக சட்டமன்றக் குழுக் கூட்டத்தில் ஒரு முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை.

கட்சியைப் பாதுகாக்கவும், புத்துயிர் கொடுக்கவும், மீண்டும் அம்மாவுடைய ஆட்சியை அமைக்கவும் புதிய கூட்டணி அமைக்க வேண்டிய சூழலில் உள்ளோம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை அதிமுக ஆதரிக்கும்!

அதன்படி, மக்கள் தீர்ப்பை ஏற்று, தற்போது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை அதிமுக ஆதரிக்கும் என்று சட்டமன்றக் குழு கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுகவின் சட்டமன்ற குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுத்துள்ளோம். கொறடவாக டாக்டர் விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற குழு துணை தலைவராக ஹரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்… இதற்கான கடிதங்கள் தற்காலிக சபாநாயகரிடம் நேற்று கொடுத்துள்ளோம். இதுதான் அதிமுகவின் முடிவு.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் தொடங்கி பல தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். இதில் யார் ஒருவரையும் குற்றம் சாட்ட நாங்கள் விரும்பவில்லை. இந்தத் தோல்விக்கு நாங்கள் அனைவரும் பொறுப்பேற்கிறோம்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இப்போது எங்களுடைய கடமை… கவலை… ‘இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும்… நம்பிக்கை கொடுக்கப்பட வேண்டும்’.

இந்த நல்ல நோக்கத்தில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய வேண்டும். நல்ல முடிவை எடுக்க வேண்டும். கட்சியில் உள்ள அனைவரையும் கலந்துகொண்டு முடிவு எடுக்க நினைத்தோம்.

அதற்காக அதிமுக பொதுச்செயலாளரைப் பொதுக்குழு விரைந்து கூட்டுமாறு கேட்டிருக்கிறோம். அங்கே தோல்விக்கான காரணத்தை ஆராயலாம். இது விரைவில் நடக்கும் என்று நம்புகிறோம்”. என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *