உதயசூரியன் சின்னம் விவகாரம் உருவாக்கிய அதிருப்தி
திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்த போதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட்ட திருச்சி தொகுதியைத் தவிர, பிற தேர்தல்களில் பெரும்பாலும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டதாகக் கட்சிக்குள் நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
தனித்துவ அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், கூட்டணியில் மதிமுக-வுக்கு உரிய அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு மட்டங்களில் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியே தற்போது கூட்டணி மறுபரிசீலனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் நெருக்கம்… துரை வைகோவின் அரசியல் நகர்வுகள்
முதல்வராகப் பதவியேற்ற பிறகு விஜய், வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தது, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் வைகோ.

இதனையடுத்து, முதல்வர் விஜய் திருச்சிக்குச் சென்றபோது விமான நிலையத்திலேயே நேரில் சென்று அவரை வரவேற்றார் துரை வைகோ. மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் நடைபெற்ற பல்வேறு ஆய்வுக் கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தது, மதிமுக தவெக அரசுடன் இணக்கமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.