எம்.எல்.ஏ-வாக இருந்த சமயத்தில் தொகுதியில் நடந்த பெரிய பணிக்கு கமிஷன் கொடுக்க பெரும் தொகையுடன் ஒப்பந்ததாரர் ஒருவர் இராமச்சந்திரனிடம் சென்றிருக்கிறார். என்னய்யா இதெல்லாம், இத நீயே எடுத்துட்டு போய் அந்த வேலையை மக்களுக்குப் பயன்படும் படியா தரமா செஞ்சு கொடு என்று திருப்பி அனுப்பினார்.
ஆச்சர்யம் தாங்காத அந்த ஒப்பந்ததாரர் இதைப் பலரிடத்தில் சொல்லியிருக்கிறார். லஞ்சம் வாங்குவதை விரும்பாதவர். இவருடன் சம காலத்தில் பயணித்த அரசியல்வாதிகள் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருக்கின்றனர். இவரோ எளிமை மாறாமல் அப்படியே இருந்தார்.

இராமச்சந்திரன் கடைசி வரை தன் நல்ல குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. ஏழை, பாழைங்களுக்கு நல்லது செய்யதான் அரசியலும், ஆட்சியும் என அடிக்கடி சொல்வார். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய நக்கலும், நையாண்டியும் அவரிடம் நிறைந்திருக்கும். எந்தச் சூழலிலும் சிரித்த முகத்துடன் இருப்பார்.
கட்சிப் பதவிகள் பெற பலர் தலைமையை முட்டி போதும் போது பதவி மீது நாட்டம் கொண்டதில்லை. மறைந்த கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலின், உதயநிதி என திமுக-வில் தொடர் ஓட்டம் கண்டவர். இன்று தன் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார். அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாக நம் கண் முன்னே வாழ்ந்த இராமச்சந்திரன் மறைவு எங்களுக்கு பெரும் இழப்புதான்” என்றனர்.