திராட்சையை நேரடியாக விற்று வெற்றி… அக்ரோ டூரிசத்தில் கலக்கும் மனோகரன்! – Kumudam

Spread the love

தேனி மாவட்டத்தில், மூன்று பக்கமும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்து, அதற்கு நடுவில், கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில், 25 ஏக்கரில் எம்.எஸ். ஆர். கிரேப்ஸ் என்ற பெயரில் சாகுபடியில் கலக்கி வருவதுடன் அக்ரோ டூரிசம் என்ற பெயரில், பலவகை சாகச விளையாட்டுக்களை திராட்சை தோட்டத்திற்கு மேல் நிகழ்த்தி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருபவர் சாதாரண விவசாயி அல்ல.

எல்.ஐ.சி. நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர் மனோகரன். தன் தோட்டத்தில் விளையும் திராட்சை முழுவதையும் சிந்தாமல் சிதறாமல் விற்பனை செய்து வரும் அவரின் அசாத்திய திறமையைப் பார்த்து வியர்ந்து நிற்கிறார்கள் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உழவர்கள்.

திராட்சை விவசாயத்தில் ஆர்வம்

ஓய்வு என்பதே விருப்பமான இலக்கை நோக்கி உழைப்பதற்கான மற்றொரு தொடக்கம் என மிகுந்த உற்சாகத்துடன் கூறி வரும் ஓய்வு பெற்ற அதிகாரி மனோகரனை சந்தித்துப் பேசினோம். “நான் எல்.ஐ.சி-யில் டெவலப்மென்ட் ஆபிசராக பணிபுரிந்து 2016-ல் ஓய்வு பெற்றுள்ளேன். ஓய்வு பெற்ற பின்னர், சும்மா இருக்க கூடாது சோம்பேரியாக வாழமுடியாது என்பதற்காகத்தான், நான் வேலை பார்க்கும்போது, நான் கடந்த 2007-ம் ஆண்டில், கம்பம்-குமுளி தேசிய நெடுஞ் சாலையில் அப்பாச்சி பண்ணை என்ற இடத்தில், எனது 25 ஏக்கரில் திராட்சை தோட்டத்தில் அக்ரோ டூரிசம் ஆரம்பித்தேன். இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், நான் 2002-ஆம் ஆண்டில் 25 ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.

இதில் என்னால் திராட்சையை சிறப்பாக விளைவிக்க முடிந்தது. ஆனால், அதில் பெரிய பிரச்னை என்னவென்றால், விற்பனைதான். இதில் பெரும் சவாலாக இருந்தது. விளைவிக்கப்பட்ட திராட்சைகளை விற்பனை செய்வதுதான். இடைத்தரகர்கள் உதவி இன்றி விற்பனை செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. அதை உடைத்து எறிந்து நேரடியாக வாடிக்கையாளர்களிடம் திராட்சையை கொண்டு சேர்க்க முடிவெடுத்தேன். ஆனால், அதிலும் பல சிக்கல் ஏற்பட்டது.

குறிப்பாக நான் ஒரு கிலோ திராட்சையை விற்பனை செய்தால், என்னிடம் ரூ.30க்கு வாங்கி இடைத்தரகர்கள், இரண்டு நாள் கழித்து, இரண்டு ரீட்டெய்லர் கை மாறி கடையில், ரூ.70 முதல் 100 வரை விற்பனையானது. இதில், என்னிடமிருந்த விலை நூறு சதவீதம் கூடியதோடு, அந்தத் திராட்சை வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்போது, தரமிழந்ததாகவும் மாறிவிடுகிறது. இதைவிட கொடுமை, என்னிடம் திராட்சை மொத்தமாக வாங்கிய இடைத்தரகர்கள், பணத்தை சில வாரங்கள் கழித்துதான் தருவார்கள், அதை வாங்கும் வரை நிம்மதி இழந்து பயத்துடனேயே வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது ஒவ்வொரு வருடத்திலும் எனது 25 ஏக்கரிலிருந்து, ரூ.5 லட்சம் வரை இடைத்தரகர்களிடமிருந்து இழப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தது.

வாடிக்கையாளர்களிடம் நேரடி விற்பனை

இந்த 5 ஆண்டில், இடைத்தரகர் களிடமிருந்து எப்படி தப்பித்து, நான் விளைவித்த திராட்சையை விற்பனை செய்வது என்று பலவழிகளில் யோசித்து கொண்டே இருந்தேன். அப்போதுதான், 2005ல் இந்தியாவில் முதன் முதலில் அக்ரோ டூரிசம் என்பது நாசிக்கில் ஆரம்பித்தார்கள். அவர்களும் என்னை மாதிரி பிரச்சனைகளை சந்தித்து, அக்ரோ டூரிசத்தில், விவசாயம் குறித்து மக்களிடம் விளக்கத் தொடங்கியிருந்தார்கள். அவர்களை பார்த்து, நானும் ஏன் நாமும் இங்கு அக்ரோ டூரிசம் ஆரம்பிக்க கூடாது என்று நினைத்து 2007ல் அக்ரோ டூரிசத்தை நான் ஆரம்பித்தேன் முதல் ஒரு வருடம், ஆட்களும், சுற்றுலா பயணிகளும் வரவைக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்.

நான் சேட்டிஸ்ஃபை… கஸ்டமர் குட் அட்வைஸர் என்பதை போல், முதன் முதலில் திராட்சை தோட்டத்திற்குள் வரத் தொடங்கியவர்களே, வெளியில் ஆச்சரியமாகச் சொல்லி கூடுதலான மக்களை வரவைக்கத் தொடங்கினார்கள்.” ‘திராட்சை கொடியில் காய்கிறதா! நாங்கள் மரத்தில் காய்கிறது.. என்று நினைத்தோம்’ என்று எங்களிடமே ஆச்சரியத்தை பகிரத் தொடங்கினார்கள். “விளையும் பூமியில் இருந்து நல்ல திராட்சையை உடனே பறித்து, உடனே கையில் கொடுக்கிறீர்கள். அவை சுவையாகவும் இருக்கிறது. ரேட்டும் குறைவாகவே இருக்கிறது” என்று சொல்லத் தொடங்கினார்கள்.

“இதனால், எனக்கு ரொம்ப மனதிருப்தி கிடைத்தது, கஸ்டமர்கள் நேரடியாக வாங்கத் தொடங்கியதும், குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் ஆத்ம திருப்தி கிடைத்தது. அதேசமயம் என்னைத் தேடி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் திராட்சையை மட்டும் விற்பனை செய்து அனுப்பக் கூடாது. வருபவர்களுக்கு, திராட்சை விவசாயத்தில் பல ஸ்டேஜ்கள் உள்ளது. அதை தனித்தனியாக பிளான்டேசன் செய்யும் முறையைக் காட்டி விளக்கத் தொடங்கினோம், முதலில் திராட்சை கவாத்து செய்து இலைகள் இல்லாத கொடி, அதற்கு பின்னர், துளிர்த்து, இலைவிட்டு, அழகாக பூ பூத்திருக்கும் பருவம். திராட்சை தோட்டம் முழுவதும் பூவைப் பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்து வியந்து பார்த்தனர்.

அதற்குப் பின்பு, மிளகு பிஞ்சு வரை காட்டி, பச்சை நிறத்திலிருந்து, பிங்க் கலரில் பழம் மாறும் வரை பல பிளான்ட்களை பார்க்கச் செய்தோம். இறுதியாக திராட்சை பழம் பழுத்து தொங்கும் இடத்தில், சேர்கள் போட்டு, ரசிக்க வைத்தோம், செல்பி, போட்டோஸ் எடுக்க அனுமதிக்கத் தொடங்கியதும், கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியது.

விளம்பரதாரர்களான பொதுமக்கள்

தோட்டத்தில் போட்டோ எடுக்கும்போது, குழந்தைகள் பழத்தைப் பார்த்துச் சாப்பிட அனுமதிக்காததால், ஏமாற்றம் அடையக்கூடாதென, குடும்பத்துடன் வருபவர்களுக்கு திராட்சை படம் எடுக்கும்போது, கப்பில் ஸ்பூன் போட்டு திராட்சைகளை குழந்தைகளுக்கு மட்டும் சாப்பிட வழங்கினோம், அதற்குப் பணம் பெறமாட்டோம், தற்போது வரை அந்தப் பழக்கத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அந்த யோசனை வீணாகவில்லை குழந்தைகள் சந்தோசமடைந்து குதூகலமடைவதும் அதைப் பார்த்து அவர்களின் பெற்றோர்கள் நெகிழ்வதும் எங்களுக்குப் புதிய அனுபவமாக அமைந்தது.

இதுபோன்ற வித்தியாசமான அணுகுமுறையால் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் திராட்சைகளை வாங்க, விற்பனை அதிகமாகத் தொடங்கியது. இதுபோன்ற அனுபவங்களை வெளியே பகிர்ந்தது வீடியோவாக பதிவாகி, சோசியல் மீடியாவில் அவரவரின் அனுபவத்தை புகைப்படங்களாவும் வீடியோகவும் பகிர்ந்தனர். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் சென்றடைந்தது.

அதைப் பார்த்த வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவியத் தொடங்கினர். தினந்தோறும் 500 பேர் வருகிறார்கள். பருவ காலங்களில் ஆயிரம் பேர் கூட வருகிறார்கள். இதனால் நாங்கள் விளைவித்த திராட்சை, வெளியில் யார் மூலமாக விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை, விளையும் இடத்திலேயே நேரடியாக கஸ்டமர்களை சென்றடைந்துவிடுகிறது.

அடுத்தபடியாக திராட்சையில் எந்தப் பொருளும் கலக்காமல் ஜூஸ் போட்டு கொடுக்கத் தொடங்கினோம், பின்னர், ஆல்கஹால் இல்லாத ஒயின் தயாரித்து விற்பனை செய்தோம். பொதுவாக திராட்சை, மருத்துவக் குணமுடையது. நிறைய பை புராடக்ட் செய்து விற்பனை செய்து வருகிறோம். சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்குகின்றனர். இதன் மூலம், 25 ஏக்கரிலும் விளையும் திராட்சையையும், யாரையும் நம்பாமல் நாங்களே முழுமையாக விற்பனையை எங்கள் இடத்தில் இருந்தே செய்துவிடுகிறோம்.

அக்ரோ டூரிசம் ஆரம்பித்து எம்.எஸ்.ஆர். கிரேப்ஸ் விற்பனை துவங்கிய இந்த 19 ஆண்டுகளில் கஸ்டமர்கள் அதிகமாகி, விற்பனையும் விறுவிறுப்பாகிவிட்டது. பொதுமக்களுக்கும் தரமான திராட்சை, குறைந்த விலையில் கிடைக்கிறதே என்ற திருப்தி. அவர்களைப் பார்த்து எங்களுக்கும் தரமான, மருத்துவக் குணம் கொண்ட திராட்சையை விளைவித்து, விற்பனை செய்ய முடிகிறதே என்ற மகிழ்ச்சி.

கூடவே நல்ல லாபமும் கிடைப்பதால் ரொம்ப சந்தோஷமாகவே இருக்கிறோம். பொதுமக்கள் தரும் உண்மையான ஆதரவே பெரியது என்பதால் கடந்த 19 ஆண்டுகளில் திராட்சைத் தோட்டத்தைப் பார்க்கவும் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கும் நுழைவுக் கட்டணம் வாங்குதே இல்லை. இதை தொடக்கம் முதலே கொள்கையாக கடைப்பிடித்து வருகிறோம்.

கூடுதல் வருவாயைத் தந்த சாகச விளையாட்டுகள்

மேலும், எங்களைத் தேடி வரும் சுற்றுலா பயணிகளை எப்படியெல்லாம் மகிழ்விக்கலாம் என யோசித்து, குழந்தைகளோடு வருபவர்களுக்கும் நல்ல என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் நோக்கத்தில், திராட்சை விவசாயம் பாதிக்காத வகையில் திராட்சைப் பந்தலுக்கு மேலே அழகான திராட்சைத் தோட்டத்தின் மேல் பகுதியில், அட்வென்சர் விளையாட்டுகளை அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இங்கு 9 வகை ஸ்கை அட்வென்சர் விளையாட்டுகள் இருப்பதால் குழந்தைகள், இளைஞர்கள், சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியை உருவாக்கினோம்.

ஸ்கை சைக்கிள், சிப் லைன் போட்டு பல்வேறு ஆக்டிவேட்டிவ், குதிரை சவாரி என குழந்தைகள் மகிழும் வகையில் பலவகையான விளையாட்டுகளை உருவாக்கியுள்ளோம். தற்போது, இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சந்தோசத்துடன் செல்வதைப் பார்க்க முடிகிறது. எல்லா விவசாயிகளும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் இந்த மாதிரி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

உலகிலேயே, கம்பம் பள்ளத்தாக்கில்தான் 365 நாட்களும் திராட்சை அறுவடை செய்யக்கூடிய பகுதி என்பதால், புவிசார் குறியீடு பெற்றுள்ளது. நான், இயற்கை விவசாயம்தான் செய்கிறேன். இடுபொருட்கள், வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு, மாட்டு எரு, ஆட்டு எரு மட்டுமே பயன்படுத்துகிறோம். இதனால், திராட்சை சுவை அதிகம், விலை குறைவு போதுமான வருமானம் கிடைத்து வருகிறது. கூடுதல் வருமானத்திற்கு அட்வென்சர் விளையாட்டுகளும் வழிவகை செய்துவிட்டது.

கடந்த பல வருட அனுபவத்தில், முழுமையான விவசாயியாக நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.” விரிவாகவே கூறி முடித்தார் ஓய்வுப் பெற்ற அலுவலர் மனோகரன். கடுமையான உழைப்பும் கவர்ச்சியான திட்டங்களும் வருவாயை அதிகரிக்கும் என்பதை மனோகரன் தன் உழைப்பு மூலம் நிரூபித்திருக்கிறார். அவரது பாதையில் மற்ற விவசாயிகளும் பயணிக்கத் தொடங்கினால், விவசாயம் ஒருபோதும் நலிவுற்ற தொழிலாக மாறாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *