திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி அங்காயி(வயது: 56). இவா், கருத்துவேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அவரது மகன் கமலதாசன்(வயது: 35) கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, அதே ஊரில் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா். இந்நிலையில், தனது தாயின் கைப்பேசி அணைக்கப்பட்டிருந்ததால் அவரைத் தேடி ஊருக்கு வந்த கமலதாசன் அவா் கிடைக்காததால் மணப்பாறை காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இது குறித்து, போலீஸாா் விசாரித்த நிலையில் ஆளிப்பட்டி வே. பழனிமுத்துகிருஷ்ணனின் தைல மரக் காட்டில் அங்காயி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் அங்காயி உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அதோடு, அங்காயி மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மணப்பாறை பகுதியில் பெண் ஒருவர் தைலமரக்காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.