திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது: 46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இன்பராஜ் (வயது: 22), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இதனால், இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பாண்டியன் போதாவூரில் இருந்து, இனாம்புலியூரில் உள்ள தோட்டத்துக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, இன்பராஜ், 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் சேர்ந்து, பாண்டியனை வெட்டிக் கொலை செய்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த சோமராம்பேட்டை காவல் நிலைய போலீஸார், இன்பராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கருணேஷ், செல்வேந்திரன், பிரதீஷ், மணிகண்டன், கவுதம், ஈஸ்வர், வசந்தகுமார், வினோத்குமார், ஆகாஷ் ஆகிய 10 பேரைக் கைது செய்தனர்.
மேலும், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட இரண்டு சிறார்கள், இளஞ்சிறார் நீதிக்குழுமத்தின் முன் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். விவசாயி ஒருவரை 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ள சம்பவம், திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.