தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்த சஷ்டியும் ஒன்று. இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தினமும் யாகசாலை பூஜையுடன் சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்களின் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்தலும், மாலையில் தங்கத்தேரில் எழுந்தருளி வெளிப் பிரகாரத்தில் வலம் வருதலும் நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்து வருகிறது.
மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி திருக்கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதனிடையே சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் நீராடியும், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்கப்பிரதட்சணம் செய்தும் செய்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் திருக்கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த பரமானந்தம் முருக பக்தர்கள் குழுவினர் கடந்த 70 ஆண்டுகளாகவே சிவன், பார்வதி, முருகன், விநாயகர், வள்ளி, தெய்வானை, திருப்பதி வெங்கடாஜலபதி, நாரதர், பிரம்மன், லெட்சுமி, சரஸ்வதி, ஒளவையார், அரசன், அரசி, வீரபாகு, இடும்பன் போன்ற பல்வேறு வேடமணிந்து திருக்கோயிலைச் சுற்றி மேளதாளம் முழங்க வலம் வந்தனர்.
அத்துடன் நாழிக்கிணறு, வள்ளிக்குகை, கிரிப்பிரகாரத்தின் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி, கடற்கரை, அய்யா வைகுண்டர் திருக்கோயில், மூவர் சமாது உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசத்தை பாராயணம் செய்தும், முருகனின் பக்திப் பாடல்களைப் பாடியும், முருகனின் போற்றி மந்திரங்களை உச்சரித்தும் வருகின்றனர்.
திரும்பும் திசையெங்கும் பச்சை ஆடை அணிந்த முருக பக்தர்கள் காணப்படுவதாலும், ”அரோகரா” கோஷம் விண்ணை முட்டுவதாலும் செந்தூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.

பல பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக 305 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. நெல்லை – திருச்செந்தூர் மற்றும் சென்னை – திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி, நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 4,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.