India
oi-Vignesh Selvaraj
டெல்லி: “மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான அறிக்கை கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை” என ராஜ்யசபா எம்.பி கமல்ஹாசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எம்.பி, மேகதாது அணை திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அந்தக் கேள்விக்கு ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில், “கர்நாடகா அரசு 2019ல் சமர்ப்பித்த மேகதாது குடிநீர் திட்டத்தின் விரிவான அறிக்கை கர்நாடக அரசுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கர்நாடகா அரசிடம் கேட்டுக்கொண்டோம். திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திற்கு இதுவரை வந்து சேரவில்லை” என மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “மேகதாது திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் தமிழ்நாட்டின் நீர் உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்கள் குறித்துத் தெளிவு கோரி, ஜல் சக்தி அமைச்சகத்திடம் நான் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தேன். காவிரி நதி பல மாநிலங்களால் பகிரப்படுவதோடு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு இவை இரண்டையும் மதிப்பது அவசியமாகும்.
மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR) குறித்த எதிர்கால மதிப்பீடுகள் அனைத்தும், காவிரி நீர் தகராறு தீர்ப்பாயத்தின் தீர்ப்பு மற்றும் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கவே மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருப்பதை நான் வரவேற்கிறேன். காவிரிப் படுகை தொடர்பான ஒவ்வொரு முடிவிற்கும் அந்தச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு நடவடிக்கைகளே அடித்தளமாக அமைய வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.