மாமன்னன் ராஜராஜன், மேலைச் சாளுக்கியரின் தலைநகரான கல்யாணபுரத்தை வெற்றிகொண்டதன் நினைவாக, தன் தலைநகரான தஞ்சையில் ஏற்படுத்திய ஊர், கல்யாணபுரம். மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி தஞ்சையை ஆண்ட காலத்தில் இவ்வூரை வரியில்லாத ஊராக அறிவித்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
இவ்வூரினை கல்யாண பத்தனம், மங்களபுரம் என்றெல்லாம் அழைத் திருக்கிறார்கள். இத்திருத்தலத்தில் உறையும் கல்யாணபுராதீசரான எம்பெருமானை பொன்னி நதிக்கரையில் நித்யவாசம் புரிபவராகவும் கண்டனபுர (கண்டியூர்) திவ்யதேசத்திற்கு அண்மையில் வசிப்பவராகவும், இருமருங்கிலும் காவிரியும், குடமுருட்டியும் சூழ்ந்து பணிவிடை செய்யப் பெற்றவராக விளங்குபவர் எனவும் ஸ்ரீநிவாஸ ஸ்துதியில் சான்றோர்கள் வர்ணித் துள்ளார்கள்.
மூர்த்தி, தலம் தீர்த்தம்மூன்றினாலும் சிறப்பு பெற்ற இத்தலத்தின் அண்மையில் புகழ்பெற்ற அஹோபில மடம் மற்றும் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் கிளைகள் உள்ளன.
கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாளின் அபிமான ஸ்தலமாக திகழும் இக்கோயில் உருவானவிதமும் கண்டியூருடன் தொடர்பு உள்ளதே
சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூரில் வசித்தமக்கள் அருகே உள்ள கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் இவ்வூர் பக்தர் ஒருவர், தங்கள் ஊரிலும் பெருமாள் எழுந்தருளிக் கோயில் கொள்ள வேண்டும் என பகவானிடம் பிரார்த்தனை செய்தாராம்.
அன்றையதினம் பெருமாள் அந்த வைணவ பக்தர் கனவில் தோன்றி, “திருப்பதி சென்று வேங்கடவனை தரிசனம் செய். அங்கே உனக்கு கோயிலுக்கான விக்ரஹ மூர்த்தங்கள் கிடைக்கும்!” என்றாராம் நடந்ததை பக்தர் மற்றவர்களிடம் சொல்ல, மகிழ்ந்த அவர்கள், அந்த வைணவ பக்தருக்குத் துணையாக மேலும் நான்கு வைணவ பக்தர்களை அனுப்பி உள்ளனர்.
ஐவரும் முதலில் திருச்சானூர் சென்று அலர்மேல்மங்கை தாயாரை வணங்கிவிட்டு திருமலைக்கு சென்று வேங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார்களாம்.
பின்னர் நாற்பத்தெட்டு நாட்கள் அங்கேயே தங்கி தினம் தினம் பெருமாளை தரிசித்து வேண்டினார்களாம். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பத் தயாரான போது பட்டாசார்யார் ஒருவர் இவர்களை அழைத்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாஸரின் உற்சவ விக்ரஹத்தைத் தந்து, ‘உங்கள் ஊரில் கோயில்கட்டி வணங்குங்கள்’ என்று சொல்லிவிட்டு, மறைந்து போனாராம்.
நம் ஊரில் ஆலயம் சுட்ட பெருமாளே உற்சவ மூர்த்திகளை கொடுத்தாக எண்ணி சிலிர்த்தவர்கள், அந்த உற்சவ விக்ரஹங்களை ஊருக்குக் கொண்டுவந்து, ஊராருடன் கலந்துபேசி தனிக் கோயில்கட்டிப் பிரதிஷ்டை செய்து வணங்கினார்களாம். அப்படிக் கோயில் கட்டியபோது ஸ்ரீநிவாஸ பெருமாளுக்கும்மூலவர்
அலர்மேல்மங்கா தாயாருக்கும் சிலா ரூபங்களை (கற்சிலைகள்) செய்து பிரதிஷ்டை செய்துள்ளனர். இப்போதும் அந்த ஐந்து வைணவ பக்தர்களின் பரம்பரையில் வந்தவர்களின் வாரிசுகளே கோயில் கைங்கர்யமும், நிர்வாகமும் செய்து வருகிறார்கள். கடந்த 9.6.2024 அன்று மஹாசம்ப்ரோக்ஷணம் சுண்ட இக்கோயில் பழமை மாறாமலே புதுப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பெருமாளையும் தாயாரையும் ஆராதிக்கின்றனர்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கிய சிறிய இராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், பலி பீடம், கொடி மரம் கருடாழ்வார் சன்னதி உள்ளது. மகா மண்டபத்தில் தூண்களும் விதானத்தில் ஓவியங்களும் அழகுறக் காட்சி தருகின்றன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலில் மகாலட்சுமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாஸ பெருமாள் மற்றும் சீதா, லக்ஷ்மணர் சமேதராக ராமர் சுதைச் சிற்பங்களாகக் காட்சி தருகிறார்கள்.
இங்குள்ள உற்சவர் திருப்பதியில் இருந்து எடுத்து வரப்பட்டவர் என்பதால், ஆண் பக்தர்கள்மேற்சட்டை அணிந்து வந்து சுவாமியை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அர்த்த மண்டபத்தின் இடது புறத்தில் ஆண்டாள் கிழக்கு நோக்கிய சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விஷ்வக்சேனர் தெற்கு நோக்கி தரிசனமளிக்கிறார். வடக்கு நோக்கிய மேடையில் இக்கோயிலுக்கு உரிய ஏனைய உற்சவ மூர்த்திகள் அணிவகுத்து சேவை சாதிக்கின்றனர்.
கருவறை நுழைவாயில் இருபுறமும் ஜயன் விஜயன் என்கிற துவாரபாலகர்கள் கம்பீரமாக நிற்கின்றனர்.
திருப்பதியில் இருந்து எடுத்து வரப்பட்ட உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாளுடன் ஆண்டாளும் முன்னால் இருக்க, பின்னால் மூலவராக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாஸர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். கன்றுடன் கூடிய பசுவின் வெள்ளித் திருவடிவும் கருவறையில் உள்ளது.
இத்தலத்தில் பக்தர்கள் வைக்கும் பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்கள்コ யாவற்றையும் பூதேவி தாயார் பெருமாளிடம் எடுத்துக் கூறுவதாக ஐதிகம். அதனை செவி மெடுத்து கேட்கும் பெருமாள், ஸ்ரீதேவி தாயாரிடம் பக்தர்களின் பிரார்த்தனை மற்றும் வேண்டுதல்களை 108 தினங்களுக்குள் முடித்துத் தர வேண்டும் என்பாராம். அவ்வாறே ஸ்ரீதேவி தாயார் பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்து வருவதாக ஐதிகம்.
எனவே இங்கு வரும் பக்தர்கள் 108 நாட்கள் பெருமாள் நாமத்தை உச்சரித்து வந்தால், எத்தகைய கோரிக்கையும் ஈடேறும் என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
பல்வேறு காரணங்களால் திருமணம் நடக்காமல் இருக்கும் இருபாலரும் அவரவருக்கு உகந்த ஏதேனும் ஒரு தினத்தில் காலை 8 மணிக்கு இத்தலம் வந்து, ஒன்பது நெய் தீபமேற்றி பெருமாளுக்கும் அலர்மேல்மங்கை தாயாருக்கும் வாசனை மிகுந்த மலர்கள் சாத்தி பெருமாளுக்கு துளசி அர்ச்சனையும் தாயாருக்கு குங்குமம் அர்ச்சனையும் செய்து ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்தபடி மணவாழ்க்கை அமையும்: மழலைச் செல்வங்கள் கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் வேண்டுதல் ஈடேறியதும் இத்தலத்துப் பெருமாளுக்கு கருடசேவை செய்துவைப்பதாகப் பலரும் வேண்டிக் கொள்கின்றனர்.
பொதுவாக வைணவ ஆலயங்களில் கருட சேவை புறப்பாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதேசமயம் பெரும்பாலும் கருடசேவையில் பெருமாள் மட்டுமே எழுந்தருளுவார். அபூர்வமாக ஒரு சில கோயில்கள் மட்டுமே தாயாருடன் எழுந்தருள்வார். இந்த ஆலயத்தில் பெருமாள் கருட சேவையின் போது தம்பதி சமேதராக காட்சி தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் உட்பிரகாரத்தில் நடைபெறும் கருட சேவையின் போது அலர்மேல் மங்கா சமேதராக ஸ்ரீநிவாஸ பெருமாள் காட்சி தருகிறார். இங்குள்ள அலர்மேல் மங்கா தாயார் படிதாண்ட பத்தினியாக திகழ்வதால், உற்சவ காலங்களில் கோயில் வெளியில் நடக்கும் சுவாமி – புறப்பாட்டின் போது நடக்கும் கருட சேவையின் போது ஆண்டாள் தாயார் சமேதராகவே – ஸ்ரீநிவாஸ பெருமாள் காட்சி தருகிறார்.
–
இங்கு பக்தர்கள் பெருமளவில் பிரார்த்தனை கருட சேவைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். புதுமணத் தம்பதிகள் – இத்தலத்தில் நடைபெறும் கருட சேவையைதரிசனம் செய்தால் அவர்களுள் அன்னோன்யம் நிலைக்கும். பிரிந்த தம்பதியர் கருட சேவை புறப்பாடு செய்வதாக பிரார்த்தனை செய்தால், தம்பதிகளுக்குள் நிலவிய பிரிவினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதுமட்டுமல்லாது, இத்தலத்தில் இலங்கும் அலர்மேல் மங்கை தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்து, வாசனை மிகுந்த மலர்கள் சாத்தி வழிபட்டால் பக்தர்கள் வாழ்க்கையில் பல்வேறு வசதிகளை உருவாக்கித் தருவாளாம். விரலி மஞ்சள் சாத்தி வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்குமாம். குண்டு மஞ்சள்கள் வைத்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயமாம். திருமஞ்சனம் மற்றும் வஸ்திரங்கள் சாத்தி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமாம்.
திருச்சுற்றில் உள்ள ஆஞ்சநேயருக்கு அமாவாசை, மூல நட்சத்திர தினம் மற்றும் சனிக்கிழமைகளில் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடக்கிறது. சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திரம் தோறும் சிறப்புத் திருமஞ்சனம் நடக்கிறது. ஆழ்வார்களுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரம் அன்று திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. வசந்த மண்டப நுழைவாயிலில் மரத்திலான தசாவதாரச் சிற்பங்களும் இரண்டு சுதவிலும் அஷ்ட லட்சுமி சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
வடகலை மற்றும் வைகானஸ சம்பிரதாயம் முறைப்படி தினசரி இரண்டு கால பூஜைகளும் உற்சவங்களும் நடக்கின்றன. சம்பிரதாய முறையை மாற்றாமல், மடைப்பள்ளியில் இன்றும் திருவமுது செய்ய விறகு அடுப்பே பயன்படுத்தப்படுகிறது. திருமஞ்சனம் செய்ய கிணற்றில் நீரை பயன்படுத்துகின்றனர். இயன்றவரை வாழை நாரில் கட்டப்பட்ட மலர்களை சாத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பெருமாள் மற்றும் தாயாருக்கு பருத்தி நூல் அல்லது பட்டு நூலால் நெய்யப்பட்ட வஸ்திரங்களை மட்டுமே சாத்துகின்றனர்.
இத்தலத்தில் தை மாதம் திருவோணம் நட்சத்திரம் (இந்த ஆண்டு 2912025) அன்று நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருமணம் ஆகாத இருபாலரும் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சாத்திய மாலைகளை பெற்றுச்சென்றால், அடுத்த வருடத் திற்குள் திருமணம் நடந்து விடுகிறது என்பது இன்றளவும் பக்தர்களின் நம்பிக்கையாகும். தமிழ்நாட்டில் உள்ள வைணவ ஆலயங்களில் இங்கு மட்டுமே ஐந்து நாட்கள் பராம்பரிய சம்பிரதாயம் முறைப்படி திருக்கல்யாணம் நடக்கிறது.
கல்யாண ம் என்ற சொல்லுக்கு திருமணம் என்ற அர்த்தம் மட்டுமன்றி, சகல சௌபாக்யங்கள், மங்களங்கள் சிறப்பானவை என்பனபோன்ற அர்த்தங்களும் உண்டு.
கல்யாணபுரத்தில் சேவை சாதிக்கும் பெருமாளும் அப்படியே வணங்குவோர்க்கு எல்லா மங்களங்களையும் குறைவற வழங்குகிறார்.
நீங்களும் சென்று தரிசித்து வாருங்கள். உங்கள் வாழ்வும் வசந்தமாகும்.



