Sakthi Vikatan – 07 July 2026 – கால் பந்து விளையாட்டும் கடவுள் வழிபாடும்! – சுவாமி விவேகானந்தர்

Spread the love

இது கால்பந்து சீசன். கால்பந்து விளையாடுவது தெய்விகப் பிரார்த்தனைகளுக்கு இணையானது என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். காரணம், நீங்கள் விளையாட்டில் முழுமையாக ஈடுபடாத வரை, உங்களால் கால்பந்து விளையாட முடியாது. வேறு ஒன்றை நினைத்துக்கொண்டு நீங்கள் இந்த விளையாட்டை சரியாக விளையாட முடியாது.

“கால்பந்து விளையாடும்போது மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாக இருக்கிறது. எங்கே மனம், உடல், செயல் அனைத்தும் ஒன்றாகிறதோ அதுவே தெய்விகம்… ஆன்மிகம்’’ என்பார் சுவாமி விவேகானந்தர்.

ஒருமுறை விவேகானந்தரின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கித் தரக்கூட விவேகானந்தரால் முடியவில்லை. மனம் வருந்தினார். பரமஹம்சரிடம் இதுகுறித்து வருத்தப்பட்டார். தான் ஆன்மிகத்தில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம் என்று மனம் கலங்கிச் சொன்னார்.

பரமஹம்சர் விவேகானந்தரைப் பார்த்தார். எதற்கும் மனம் கலங்காத விவேகானந்தர் கலங்கி நிற்பதைக் கண்டு அதிசயித்தார். பிறகு விவேகானந்தரை நோக்கி, “நீயே தாய் காளியிடத்தில் உனக்கு என்ன தேவையோ கேள்” என்றார். விவேகானந்தரும் அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்து பின் வெளியே வந்தார்.

பரமஹம்சர், “உன் தேவைகளைக் கேட்டாயா?” என்றார்.

அப்போதுதான் விவேகானந்தருக்கு… தான் என்ன நினைத்துக் கொண்டு உள்ளே சென்றோம் என்ற நினைவு வந்தது. “மறந்து விட்டேன்” என்றார். பரமஹம்சர், “வேண்டுமானால் மீண்டும் சென்று கேள்” என்றார்.

ஆனால் விவேகானந்தர் மறுத்துவிட்டார். “சுவாமி பரம் பொருளின் முன் நிற்கும்போது அற்பமான வேண்டுதல்களை முன்வைக்க என்னால் முடியாது. அதேவேளையில் என் மனத்தின் எண்ணத்தையும் அவள் அறிவாள். எனவே நான் என் ஆன்மாவையும், உடலையும், மனதையும் உலகாதாயமான பிரார்த்தனைகளில் செலுத்துவதில்லை” என்றார்.

நாம் இதில் அறிந்துகொள்ள ஒன்று உண்டு. நாம் விவேகானந்தர் போல் ஞானி அல்ல. அதனால் நமக்குத் தேவையான ஒன்றை இறைவனிடம் கேட்கலாம். அப்படியே கேட்பது எதுவாயினும் மனம், ஆன்மா, செயல் என மூன்றும் ஒன்றிணையக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்கும்போது நமக்குள் ஆன்ம ஞானம் பிறக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *