திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனியார் காலிமனை பகுதிக்கு பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் காரில் இன்று பிற்பகல் வேளையில் வந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள் காலிமனை பகுதியில் வைத்தே இருவரையும் கொடூரமாக வெட்டி சாய்த்தனர்.
இந்தத் தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த இரட்டைக் கொலையை அரங்கேற்றிய நபர்கள், அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து தகவலறிந்ததும், திருப்பத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பிய கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலைச் செய்யப்பட்டவர்களில் ஒருவரான அந்த ஆண் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரஞ்சித் எனத் தெரியவந்திருக்கிறது. அந்த பெண் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், திருமணத்தை தாண்டிய தகாத உறவில் இருவரும் இருந்திருக்கலாம். திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூருக்கு வந்து அப்பெண்ணை அழைத்துக்கொண்டு காரில் சென்றபோது, பெண்ணுக்குச் சம்பந்தப்பட்ட நபர்களால் தீர்த்துக் கட்டப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. ஆனாலும், பட்டப்பகலில் நடந்தேறியிருக்கும் இந்த கொடூரச் சம்பவம், பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.