திருப்பரங்குன்றத்தில், ஆகம விதிகளின்படியும், நீண்டகால மரபின் அடிப்படையிலும் முருக பக்தர்கள் எதை விரும்புகிறார்களோ, எந்த இடத்தில் காலங்காலமாகத் தீபம் ஏற்றப்படுகிறதோ அதையே பின்பற்றுவதுதான் எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் எதையும் மாற்றவில்லை. மலைமீது இருப்பது நில அளவைக் கல்லா அல்லது தீபத் தூணா என்பதே பிரதானமான கேள்வி. உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் இந்தச் சந்தேகம் உள்ளது. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு இருக்கிறது. எனவே, மக்களின் உணர்வுகள், நீண்டகால மரபுகள் மற்றும் ஆகம விதிகள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப நீதிமன்றங்கள் உரிய முடிவெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நில அளவைக் கல்லில் சென்று தீபம் ஏற்றுவது இந்து ஆகம விதிகளுக்கு எதிரானதாக அமையாதா? காலங்காலமாகத் தீபம் ஏற்றப்பட்டு வரும் இடத்தை விடுத்து, வேறு இடத்தை தேர்வு செய்ததின் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் மதவெறியையும், மத மற்றும் சமூகப் பதற்றத்தையும் உருவாக்குவதையே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்துவதில் விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் உறுதியாக நிற்கும்.