மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த ஆண்டு மட்டும் மலை உச்சியிலுள்ள தூணிலும் விளக்கு ஏற்ற வேண்டும்’ என்று கடந்த நவ.20-ம் தேதி உத்தரவிட்டது. அதற்கான பொறுப்பை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த உச்ச நீதிமன்றம், விளக்கேற்றுவதற்கு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு, திருப்பரங்குன்றம் பகுதியில் தடை உத்தரவை பிறப்பித்தது. மதுரை மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவுக்கு எதிரான அவசர மனு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதனால்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டது’ என்று அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘சீராய்வு மனு தாக்கலாகி இருப்பதைக் கணக்குக் காட்டி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது. தவறினால், உச்ச நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைக்கு அதிகாரிகள் ஆளாக நேரிடும்’ என்று எச்சரித்தனர். அத்தனையையும் கேட்டுக்கொண்டுவிட்டு, தூணில் விளக்கு ஏற்றவில்லை தமிழக அரசு.
இதுதான் பா.ஜ.க-வினரை கடும் டென்ஷனாக்கியிருக்கிறது. எதற்கும் பெரிதாக ரியாக்ட் செய்யாத பா.ஜ.க-வின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், நேற்று நள்ளிரவு 12 மணி வரையில் த.வெ.க அரசின் நடவடிக்கை குறித்து தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் காரசாரமாக விவாதித்திருக்கிறார்.