திருமண தடைகள் நீங்க வேண்டுமா?… சிறப்பு குரு வழிபாடு! – Kumudam

Spread the love

இந்த வாழ்க்கையே வரம்தான் என்றாலும் வாழ்க்கையை  க.மு. – க.பி., என்று பிரித்துப் பார்ப்பதில்தான் வாழ்வின் வளர்ச்சியே அடங்கியிருக்கிறது. கல்யாணத்துக்கு முன் ஒருவிதமாகவும் திருமணத்துக்குப் பிறகு வேறொரு வகையில் வாழ்க்கை அமைந்துவிடும். இதையே இல்லறம் என்கிறோம். இல்லறம் நல்லறம் என்கிறோம்.
’பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டா எல்லாம் சரியாயிரும்’ என்று பல வீடுகளில் இன்றைக்கும் சொல்லுகிறார்கள்.

அப்படிக் கல்யாணம் நடந்துவிட்டால், ‘வீட்டுக்கு மகாலட்சுமி வந்துவிட்டாள்’ என புளகாங்கிதம் அடைகிற மகனைப் பெற்றெடுத்தவர்கள் இருக்கிறார்கள். அமைதியும் ஆனந்தமும் தவழும் இடமாக சொர்க்கத்தைச் சொல்கிறோம். திருமணமும் அப்படித்தான். அதனால்தான் கல்யாணத்தை இறைவன் கொடுத்த வரம் என்றும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றும் சொல்கிறோம்.

படிப்புக்கோ உத்தியோகத்துக்கோ நட்புக்கோ ஜாதகமெல்லாம் பார்ப்பதில்லை. ஆனால் திருமணத்துக்கு ஜாதகம் பார்க்கிறோம். பொருத்தக் கணக்குகளை கணிக்கிறோம். அதனால்தான் காதலாகட்டும் கல்யாணமாகட்டும் ஈருடல் ஓருயிர் என இலக்கியங்களும் ஆண் பெண் உறவைக் கொண்டடுகின்றன.
கல்யாண வைபவம் கடவுள் கொடுத்த வரமாக இருந்தாலும் ஜாதக ரீதியாக குரு பலம் இருந்தால்தான் வீட்டில் கெட்டிமேளம் கொட்டப்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

ஆனானப்பட்ட பார்வதிதேவி, சிவனாரின் மீது மையல் கொண்டாள். ‘கட்டினால், ஈசனைத்தான் கல்யாணம் செய்வேன்’ என்று ஒற்றைக்காலில் நின்று தவம் இருந்தாள். எத்தனையோ தவங்களை மேற்கொண்டாலும் பார்வதிதேவிக்கு குரு பலம், குரு யோகம், குரு பார்வை கிடைத்ததை அடுத்தே கைத்தலம் பற்றினாள் என புராணங்கள் விவரிக்கின்றன.

ஆக உலகாயத வாழ்வில் உமையவளுக்கே இதுதான் நிலையென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம். குருவை எவரொருவர் அனவரதமும் அதாவது எப்போதும் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு திருமண பாக்கியம் விரைவிலேயே கைக்கூடும் என்பது உறுதி. அதனால்தான் வியாழக்கிழமையில் குருவை வணங்குகிறோம். வியாழக்கிழமையை குருவாரம் என்கிறோம். திருமணத்தை வியாழநோக்கம் என்கிறோம்.

சிவனார் எடுத்த வடிவங்களில், தட்சிணாமூர்த்தி முக்கியமான, அற்புதமான வடிவம்.அதனால்தான் குருவுக்கு உகந்த வியாழக்கிழமையில் குருவை வணங்கி வழிபட்டு பிரார்த்தனைகளை மேற்கொள்கிறோம். சிவபெருமான், குருவாக கல்லால மரத்தடியில் இருந்து, சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளினார். ஆகவே நமக்கும் ஞானமும் யோகமும் அருளக்காத்திருக்கிறார் தட்சிணாமூர்த்தி. தட்சிணம் என்றால் தெற்கு. மூர்த்தம் என்றால் சிலை. மூர்த்தி என்றால் சிலைக்குள் விக்கிரகத்துக்குள் வீற்றிருப்பவர் என்பது அர்த்தம். தெற்குப் பார்த்த நிலையில், வாழ்வின் சகலங்களையும் தந்தருளும் தெய்வமாக, குருவாக அருள்பாலிக்கிறார் தட்சிணமூர்த்தி.

அதேபோல், நவக்கிரகங்களில் குரு எனும் கிரகமும் உண்டு. தேவ குரு, அசுர குரு என்று சொல்கிறோம். தேவ குரு பிரகஸ்பதி. அசுர குரு சுக்கிரன். ‘அவனுக்கென்னப்பா… சுக்கிர யோகம் கூடிருச்சு’ எனும் வார்த்தை சத்திய வார்த்தை. வியாழக்கிழமைகளில், சிவாலயத்துக்குச் சென்று சிவனாரையும் உமையவளையும் வணங்குகிற அதேவேளையில், பிராகாரத்தில் இருக்கிற தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரகத்தில் இருக்கிற சுக்கிர குருவையும் குரு பிரகஸ்பதியையும் வணங்கி வழிபட்டு வந்தால், குரு பலம் பெறலாம்; குருவின் பார்வை நம் மீது விழும்.

குரு யோகம் கிடைக்கும். கல்யாணமும் கைசேரும். திருமணத்தடையால் கலங்கித் தவிப்பவர்கள், ஆணோ பெண்ணோ எவராக இருந்தாலும் வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு செய்யவேண்டும். தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களும் சுக்கிரபகவானுக்கு வெண்மை நிற மலர்களும் தந்து, பிரார்த்தனை செய்து வந்தால், நல்ல வாழ்க்கைத்துணை நிச்சயம்; நல்ல வாழ்க்கை அமைவது சத்தியம்!

– வி.ராம்ஜி

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *