திருமாவளவனுக்கு ‘NO’… கூட்டணி கதவை மூடிய உதயநிதி? திமுக எடுத்த அதிரடி முடிவு! – Kumudam

Spread the love

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு அரசியலில் பல கணக்குகளைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. இரண்டு தொகுதிகளையும் ஆளும் தவெக கைப்பற்றியிருந்தாலும், இந்தத் தேர்தல் திமுகவுக்கு வேறு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமல் தனியாகக் களம் கண்ட திமுக, இரண்டு தொகுதிகளிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதே நேரத்தில், கடந்த காலங்களில் திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இல்லாத நிலையிலும் திமுகவால் கணிசமான வாக்குகளைப் பெற முடிந்திருக்கிறது என்பது திமுகவிற்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது.

இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்!

‘கூட்டணிக் கணக்குகள்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும்’ என்ற பழைய ஃபார்முலாவுக்கு இந்த இடைத்தேர்தல் கொஞ்சம் ட்விஸ்ட் கொடுத்திருப்பதாக திமுக தரப்பினர் கருதுகிறார்களாம். குறிப்பாக, கூட்டணி இல்லாமலேயே திமுகவின் வாக்கு அடித்தளம் ஓரளவு உறுதியாக இருப்பது அக்கட்சிக்குள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில்தான் விசிக விவகாரம் மீண்டும் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்தபோது தனது கட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது தவெக அணியில் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், திமுக தனித்து நின்று பெற்றுள்ள வாக்குகள், ‘விசிக இல்லாமல் திமுகவால் களத்தில் நிற்க முடியுமா?’ என்ற கேள்விக்கு வேறு விதமான பதிலை அளித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதிலும், ‘விசிக எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ அந்தக் கூட்டணிக்கே வெற்றி’ என்ற ரீதியில் திருமாவளவன் கூறிவரும் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திமுகவுடன் எதிர்காலத்தில் மீண்டும் கூட்டணி அமைக்கும் வாய்ப்புக்கான அரசியல் கதவு திறந்தே இருக்க வேண்டும் என்பதற்கான சமிக்ஞைகளாகவே இதை சிலர் பார்க்கின்றனர்.

ஆனால், அறிவாலயத்தில் நிலைமை அப்படியா?

திமுக தரப்பில் இருந்து வரும் தகவல்கள் வேறு ஒரு கதையைச் சொல்கின்றன. தனித்து நின்று தேர்தலைச் சந்தித்ததன் மூலம் கட்சியின் வாக்கு பலத்தை பரிசோதித்துவிட்டோம். இனி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் இறங்க வேண்டிய அவசியம் இல்லை என்ற மனநிலை கட்சிக்குள் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கூட்டணி தொடர்பான விஷயங்களில் உதயநிதி ஸ்டாலின் மிகவும் கறாரான நிலைப்பாட்டில் இருப்பதாக குறிஞ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல, இதுவரை விசிக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகளை விமர்சிப்பதில் திமுகவின் ஐடி விங் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அடக்கி வாசித்ததாகக் கூறப்படும் நிலையில், இனிமேல் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற சிக்னல் உதயநிதி தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு இனி கட்சிக்குள் இருந்து பெரிய அளவில் ‘பிரேக்’ போடப்படாது என்றும் சொல்லப்படுகிறது.

இதன் வெளிப்பாடாகவே, காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரின் கருத்துகளுக்கு திமுக தரப்பிலிருந்து முன்பைவிடக் கடுமையான பதில்கள் வரத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருபக்கம் தவெக இரண்டு தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறது. இன்னொரு பக்கம் திமுக கூட்டணியின்றியே தனது வாக்கு பலத்தை நிரூபித்திருக்கிறது. இதற்கிடையே, திமுகவுடன் இருந்த பழைய கூட்டணி உறவுகள் எந்தத் திசையில் செல்கின்றன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அப்படியானால், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணி கணக்கு மீண்டும் மாறுமா? திருமாவளவன் தரப்பிலிருந்து வரும் ‘சிக்னல்களுக்கு’ அறிவாலயம் பதில் கொடுக்குமா? அல்லது ‘இனி தனித்தே போட்டி’ என்ற முடிவில் திமுக உறுதியாக நிற்குமா?

இப்போதைக்கு அறிவாலயத்திலிருந்து வரும் அரசியல் காற்று… ‘கூட்டணி கதவு திறக்குமா?’ என்பதைக் காட்டிலும், ‘கதவு இருக்கிறதா?’ என்பதையே கேட்க வைப்பதாக இருக்கிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *