திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் பாண்டுரங்கன்: பண்டரிபுரம் சென்ற பலன்… திருமண வரம் கிடைக்கும்! | thiruvannamalai thennangur panduranga temple

Spread the love

இந்தத்தலத்தின் தலவிருட்சமாக தமால விருட்சம் உள்ளது. பகவான் கிருஷ்ணர் தமால விருட்சத்தின் அடியில் நின்றுகொண்டுதான் புல்லாங்குழல் இசைத்ததாகவும், அந்த இசையில் ராதை லயித்ததாகவும் சொல்லப்படுகிறது. பொதுவாக வட இந்தியப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தமால விருட்சம் இங்கே இருப்பது தனிச் சிறப்பு.

இங்கு சனிக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில் திருப்பதியைப் போலவே திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது. வைதீக சம்பிரதாயமும் பஜனை சம்பிரதாயமும் இணைந்து மிக அற்புதமாக நடைபெறுகிறது திருக்கல்யாண வைபவம். இப்படியான வைபவங்கள் மட்டுமின்றி, இந்தப் பீடத்தில் திகழும் வண்ண ஓவியங்களும் பக்தர்கள் தரிசித்து மகிழவேண்டிய கலைப் பொக்கிஷங்களாகும்!

இந்தப் பீடத்தில் பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் உள்ளது போன்றே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்தக் கோபுர தரிசனம் நமக்குப் பூரிக்குச் சென்ற புண்ணியத்தையும், இந்தப் பீடத்தில் அருள்மிகு ரகுமாயி சமேதராகக் காட்சி தரும் பாண்டுரங்கன் தரிசனம் நமக்குப் பண்டரிபுரம் சென்ற புண்ணியத்தையும் ஒருசேரத் தருகின்றன.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்

தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில்

இந்தப் பீடத்தில் பாண்டுரங்கன் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுராபுரி ஆளும் மன்னனின் அலங்காரத்திலும், வியாழன் அன்று பக்தர்களுக்கு ஸ்ரீபாத தரிசனம் அருளும் வகையில் எளிய அலங்காரத்திலும், வெள்ளியன்று வெள்ளிக் கவசம் அணிந்தும், சனிக்கிழமைகளில் திருப்பதி பெருமாளைப் போலவும் தரிசனம் அருள்கிறார்.

யந்திர வழிபாட்டின் அடிப்படையான ஸ்ரீசக்ர அதிதேவதைகள் அனைத்தும் இங்கு இருப்பது விசேஷம். இறைவனுக்கு நாமசங்கீர்த்தனம் (பக்திப் பாடல்) மூலம் வழிபாடு செய்யப்படுவது, இத்தலத்தின் தனிச் சிறப்பம்சம்.

தென்னாங்கூரில் சுவாமி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் பாண்டுரங்கன் ஆலயம் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் `சாகேத விருட்சம்” என்னும் ஒரு விருட்சம் உள்ளது. சுவாமி ஹரிதாஸ்கிரி குஜராத்தில் உள்ள துவாரகாவிலிருந்து இந்த மரத்தின் கிளையினைக் கொண்டு வந்து இங்கு நட்டுவைத்தார்.

துவாரகாவில் இருக்கும் சாகேத விருட்சத்தின் கீழ் நின்றுதான் ருக்மிணி தன் காதல் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு கண்ணனை அடைந்தாள். கண்ணன் அந்த மரத்தின் கீழ் இருந்துதான் குழல் ஊதுவானாம். அந்த மரத்தின் அடியில் நின்று வேண்டிக்கொண்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை.

எப்போதும் குடைபோலவே வளர்ந்து நிழல் பரப்பும் அந்த மரத்தின் ஒரு கிளையே இந்தக் கோயிலில் நட்டு வளரச் செய்திருப்பதால், இந்த மரமும் துவாரகையின் சாகேத மரத்தைப் போலவே மனமொருமித்த காதலர்களைத் திருமணப் பந்தத்தில் இணைத்து வைக்கும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை தென்னாங்கூர் சென்று பாண்டுரங்கனை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்வில் நன்மைகள் பலவும் கூடிவரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *