திருவண்ணாமலை மாவட்டம் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்: தீய சக்திகளை விரட்டி நல்லருள் தருவாள்!

Spread the love

ஊர்தோறும் அம்மன்கோயில்கள் உண்டு. அவளே காக்கும் தெய்வம். கருமாரி, காமாட்சி, மீனாட்சி என்று பல்வேறு நாமங்கள் கொண்டு மக்களைக் காப்பவள். அவளே பச்சையம்மனாக அருள்பாலிக்கும் தலங்கள் பல உண்டு.

அவற்றில் முக்கியமானது முனுகப்பட்டு. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள சிற்றூர் முனுகப்பட்டு. ஆரணியிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

இங்கே அம்மன் பச்சையம்மனாகக் கோயில்கொண்டிருக்கிறாள். சுற்றியுள்ள ஊர்மக்கள் அனைவருக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள் பச்சையம்மன்.

தங்களின் கஷ்டங்களை ஓடிவந்து இந்த அம்மனிடம் உரிமையோடு முறையிடுகிறார்கள். அம்மனும் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதோடு அவர்களின் துன்பத்தையும் நீக்கி அருள்கிறாள். வாருங்கள், அந்த அம்மனின் சிறப்புகளையும் தலவரலாற்றையும் தெரிந்துகொள்வோம்.

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்

தற்போது நாம் தரிசிக்கும் பச்சையம்மன் ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். இங்கே ஈசன் லிங்க ரூபராக அருள்பாலிக்கிறார்.

முன்னொரு காலத்தில் பிருங்கி முனிவர் அம்பாளை வழிபடாமல் வண்டு ரூபமெடுத்து ஈசனை மட்டும் வலம் வந்து வழிபட்டார். இதனால் கோபம் கொண்ட அன்னை ஈசனிடம் தன்னக்குரிய உரிமையைப் பெற விரும்பினாள்.

அதற்காக பூலோகம் வந்து தவம் செய்ய ஆரம்பித்தாள். அப்படி அவள் பூவுலகில் தவம் செய்த தலங்களில் ஒன்று முனுகப்பட்டு.

இங்கே மண்ணால் ஈசனை வடிவமைத்துப் பூஜித்துத் தவம் செய்யத் தொடங்கினாள் அம்பிகை. அவளைச் சோதிக்க விரும்பிய பரமன், அங்கிருந்த நீர்நிலைகள் எல்லாம் வற்றிப்போகும்படிச் செய்தார்.

பூஜைக்கு நீர் கிடைக்கவில்லை. உமையவள் தன் பிள்ளைகளான முருகனையும் பிள்ளையாரையும் அழைத்துத் தீர்த்தம் கொண்டு வரும்படி ஆணையிட்டாள். அவர்களும் புறப்பட்டனர். ஆனால், வெகுநேரம் ஆகியும் இருவரும் திரும்பவில்லை. ஆகவே, கையில் இருந்த பிரம்பினால் பூமியைத் தோண்டினாள் அம்பிகை. நீர் ஊற்றெடுத்துப் பெருகியது. அதுவே, `பிரம்பக நதி’ என்று பெயர் பெற்றதாம்.

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்

இந்த நிலையில், முனிவர் ஒருவரின் கமண்டலத்தைக் கவிழ்த்து கமண்டலநாக நதியை உருவாக்கினார் விநாயகர். வேலவனோ, அங்கிருந்த மலையின் மீது வேலாயுதத்தை ஏவி, நீர் பெருகச் செய்தார். அவ்வாறு சேயோன் உருவாக்கிய நதியே செய்யாறு ஆனதாம்.

இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடம் என்பதால், `முக்கூட்டு’ எனப் பெயர்பெற்றது இந்த ஊர். அதுவே தற்போது `முனுகப்பட்டு’ என்று மருவியதாம்.

மூன்று நதிகளைக் கண்டு அம்பிகை மனம் குளிர்ந்தாள்; அவளின் மேனி பச்சை வண்ணமானது என்கிறது தலவரலாறு. தொடர்ந்து ஈசனுக்கு வாழைப்பந்தல் அமைத்து வழிபட்டாள் அம்பிகை. அவளின் தவம் தொடர்ந்தது. அப்போது ஆகாய வீரன், அக்னி வீரன் ஆகிய அரக்கர்கள் ஈசனின் திருமேனியைத் தூக்கிச் சென்றனர்.

இந்த நிலையில் அவளின் தவம் தடைப்படக் கூடாது எனக் கருதி, மகாவிஷ்ணு வேறொரு சிவலிங்கத்தைக் கொடுத்து உதவினார். மேலும், அரக்கர்களின் தொந்தரவு இருக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், ஈசனும் விஷ்ணுவுமே வாழ்முனி, செம்முனியாக மாறி காவல் காத்தார்களாம். கோயிலுக்கு வெளியே இவர்களுக்குச் சந்நிதிகள் உள்ளன.

நாள்கள் நகர்ந்தன. பார்வதியின் தவத்தால் மகிழ்ந்த ஈசன், அம்பிகைக்கு தன் தேகத்தில் சரி பாதி கொடுத்து, அர்த்த நாரீஸ்வரராக அருள்பாலித்தார். அதன்பின்னர் அம்பிகை திருவண்ணாமலையில் அருளும் அண்ணாமலையாரை அடைந்தாள் என்கிறது தலபுராணம்.

சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான பக்தர்கள், இந்தப் பச்சையம்மனைத் தங்களின் குலதெய்வமாக வணங்குகிறார்கள். இங்கு வந்து குழந்தை வரம், திருமணம் வரம் மற்றும் சொந்த வீடு அமைய அம்மனை வேண்டிக்கொள்கிறார்கள்.

பச்சையம்மன் தன் கைகளால் சிவபெருமானை வடிவமைத்ததால் அவருக்கு `மன்னார் சாமி’ என்று பெயர் வந்தது. இங்குள்ள வேப்பமரத்தில் தாலி கட்டி அம்மனை வேண்டிக்கொண்டால் விரைவில் கல்யாணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், பிள்ளை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில்

மட்டுமன்றி… பிள்ளை வரம் வேண்டுவோர், இங்கு வந்து அம்பாளுக்கு புடவை சாத்தி, ஜடை பின்னி அலங்காரம் செய்து, வளையல்கள் அணிவித்து, ஒன்பது வகையான சாதம் வைத்து, அம்பாளுக்கு வளைகாப்பு செய்து வழிபட்டால், விரைவில் அவர்கள் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும்.

அம்பாளுக்கு அணிவித்த வளையல், பூவுடன் சேர்த்து பச்சை நிற குங்குமமும் இங்கு வழங்கப்படுவது விசேஷம். இங்குள்ள வாழ்முனி, செம்முனி சந்நிதியில் தேங்காய் உடைத்து வழிபட்டால், நம்மைப் பிடித்திருக்கும் தீய சக்திகள் யாவும் சிதறி ஓடும் என்பது ஐதிகம்.

வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை முனுகப்பட்டு சென்று பச்சையம்மனி தரிசித்து வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *