தல தீர்த்தம் குப்த கங்கை, யம தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்கள் இங்கிருக்கின்றன. கங்கையே விரும்பி உறையும் குப்த கங்கைக் கரையில், கங்கைக் கரை விநாயகர் தொடங்கி, அறுபத்து மூவர், தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், சந்திர மௌலீஸ்வரர், வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், மகாலட்சுமி என எண்ணற்ற சந்நிதிகளும் தெய்வ வடிவங்களும்கொண்ட பிரமாண்ட ஆலயமிது.
இங்கு யோக பைரவர் மேற்குப் பார்த்து யோக நிலையில் அருள்கிறார். இவருக்கு நாய் வாகனம் இல்லை. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தீர நெய் வடை மாலை சார்த்தி அபிஷேகம் செய்வது சிறந்த பரிகாரமாகச் சொல்லப்படுகிறது.
மாசி மக உற்சவத்தில் இரண்டாம் நாள், பரணி நட்சத்திர நாளில் வாஞ்சிநாதர் யம வாகனத்தில் புறப்பட்டு, யம தீர்த்தம் சென்று தீர்த்தவாரி கொடுப்பார். இதை தரிசிப்பவர் யம பயம் இன்றி வாழ்வர் என்பது நம்பிக்கை.

இங்கிருக்கும் வெண்ணெய் பிள்ளையாரை வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு வேண்டிக்கொண்டால் நலம் பெறலாமாம். குணமான பிறகு இவரது திருமேனியில் வெண்ணெய் தடவி, பிரார்த்தனையை நிறைவேற்றலாம் என்பதும் விசேஷம்.
துர்காதேவி இங்கே மகிஷாசுரமர்த்தினியாக எட்டுக் கரங்களுடன் இருக்கிறார். இந்த தேவியை வழிபட்டால் பயங்கள் விலகுகின்றன. எதிர்களின் தொல்லைகள் முற்றிலும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
இந்தத் தலத்திலுள்ள மிகப் பெரிய விசேஷம் ராகுவும் கேதுவும் தனித்தனியே இல்லாமல் ஒரே உடலுடன் இங்கு அருள் பாலிப்பதே. அமுதம் உண்டு, சிரஞ்சீவி தன்மைகொண்ட இந்த இருவரும் இங்கே ஈசன் அருளால் ஓர் உருவாகி `சண்டராகு’ என்றாகினர். இவர்களை வணங்க நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் அடைவர் என்பதும் நம்பிக்கை. இந்தத் தலம் ராகு, கேது பரிகாரத் தலமாகவும் இருக்கிறது.
இங்கு வந்து இலுப்பை எண்ணெயில், தாமரை நூல் திரி போட்டு தீபமேற்றி, வார சூனிய பரிகார பூஜை செய்தால் எதிரிகள் தொல்லை தீரும் என்கிறார்கள். மேலும், இங்கிருக்கும் ஈசனை வழிபட்டால் காரியத்தடை நிவர்த்தி, பிதுர் தோஷ நிவர்த்தி, திருமணத்தடை நிவர்த்தி உண்டாகும். இங்கு வந்து வழிபட்ட அதேநாளில் சிதலபதி ஆதி விநாயகர் கோயிலுக்கும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்று வணங்க வேண்டும் என்பதும் ஒரு நம்பிக்கை.
இந்த அற்புதமான ஆலயத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.!