“தீண்டாமை சுவற்றை உடனே அகற்றுங்கள்” – அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து கெஞ்சிய நபர்; என்ன நடந்தது? | school educational minister rajmohan erode book fair controversy.

Spread the love

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அருகில் உள்ள சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் 22-வது ஆண்டு புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நேற்று மாலை தொடங்கி வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ராஜ்மோகன் காலில் திடீரென விழுந்த நபர் ஒருவர், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் சமுதாய குழந்தைகள் கல்வி கற்க தடையாக உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் தற்போது ஈரோடு மாவட்டம் வரை வந்து மனு அளிக்கிறேன். தீண்டாமைச் சுவரை அகற்ற உடனடியாக உத்தரவிடுங்கள்” எனக் கோரிக்கையை வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

இது குறித்து அவரிடம் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன், “ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து நீங்கள் என்னைத் திட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தாலும் பரவாயில்லை, குழந்தைகளின் கல்விக்காக நீங்கள் வைக்கும் இந்த நியாயமான கோரிக்கையை நான் ஏற்கிறேன். உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்” என உறுதியளித்திருக்கிறார்.

கோரிக்கை மனு அளித்த நபர் குறித்தும் விருதுநகர் மாவட்டத்தில் எந்தப் பகுதியில் அந்தத் தீண்டாமைச் சுவர் உள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *