‘துரைமுருகன் வீட்டுத் திருமணம் – ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்! |Duraimurugan’s Family Wedding: A Major Embarrassment for a Dravidian Movement!

Spread the love

அண்ணா மறைந்த போது அவருக்காக பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பில், ‘அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டுக்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ்ப் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தன. அவரும் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பரப்பி, அதை உருவாக்குவதே தனது கடமை என்றே கருதியிருந்தார். அதற்கேற்ப, அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது, சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டம் ஆகும். இதில் கடவுளுக்கோ மதத்துக்கோ சாத்திர சம்பிரதாயத்துக்கோ இடமில்லை’ என அண்ணாவை பெருமிதமாக போற்றியிருந்தார்.

பெரியாரின் கனவை அவரின் மாணாக்கர்கள் மனதில் உறுதியாகஏந்தி நின்றனர். இளம் வயதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு பெண்ணை விரும்புகிறார். இருவீட்டாரும் கூடி பேசுகிறார்கள். கருணாநிதி கொள்கையின்பால் நின்று சுயமரியாதை திருமணம்தான் நடக்க வேண்டும் என்கிறார். பெண் வீட்டார் சடங்கு சம்பிரதாய திருமணத்தில் பிடிப்போடு நின்றனர். கருணாநிதி காதலை துறந்தார். கொள்கைதான் முக்கியமென பெரியாரின் வழி நடந்தார். பின்னாளில் முதல்வரான பிறகும் தமிழகத்தைப் போலவே தேசியளவிலும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டி முறையிட்டார்.

இந்தப் பின்னணியிலிருந்துதான் துரைமுருகன் வீட்டு திருமணத்தின் மீதான விமர்சனங்களை அணுக வேண்டும். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பேருடனும் பயணப்பட்டவர் துரைமுருகன்.

முக்கால் நூற்றாண்டை கடந்த பேரியக்கமான திமுகவின் இன்றைய மிக மூத்தத் தலைவர் துரைமுருகன்தான். இன்னொரு முக்கியமான விடயத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுகவுக்கு அரசியல் நெருக்கடியும் அதன் இருப்பு மற்றும் எதிர்காலத்தின் மீதான கேள்வி எழுந்திருக்கிறது.

இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி அந்த இடத்தில் புதிய சக்தி ஒன்று அமர்ந்திருக்கிறது. அரசியல் சந்தையில் மக்களின் நுகரும் தன்மை மாறியிருக்கிறது. இப்படியொரு புதிய சக்தியின் வெற்றிக்கு திமுக, அதிமுக இத்தனை ஆண்டுகளாக கொடுத்த ஏமாற்றங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

குறிப்பாக இன்னமும் திராவிட மாடல், திராவிடியன் ஸ்டாக் என கொள்கை அரசியல்தான் பேசுகிறோம் என நம்பவைக்கும் திமுகவுக்கு இந்த அரசியல் மாற்றம் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தங்கள் மீதான மக்களின் அதிருப்திகளை கலைந்துவிட்டு கொள்கைப் பிடிப்போடு புத்துயிர்ப் பெற்று ஓடி ஒரு புதிய தலைமுறையை ஈர்க்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருக்கிறது.

இப்படியொரு நிலையில் மேடையில் கொள்கை பீரங்கியாக முழங்கிவிட்டு, ‘எங்களைப் போல கொள்கை கோட்பாடு பேச ஆள் உண்டா?’ என காலரை தூக்கி சவடால் பேச்சுகளை பேசிவிட்டு, தங்கள் வீட்டுக்குள் பேசிய பேச்சுக்கும் பற்றிக் கொண்ட கொள்கைக்கும் மாறாக செயல்பட்டால் பொதுச்சமூகம் கேள்வி கேட்கத்தான் செய்யும்.

நீங்கள் பேசும் அரசியல் ஒழுங்கு, கொள்கை ஒழுங்கு எல்லாம் கொடி பிடிக்கும் தொண்டன் உயிர் மூச்சாக நினைத்து கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், சௌகரியமான பதவியில் இருப்போர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெற்று வசனங்களை மட்டுமே பேசிவிட்டு கொள்கையை காற்றில் பறக்கவிட்டால் கட்சியின் உடன்பிறப்புகள் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்!

ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் ஒரு பேரியக்கத்துக்கு பெரும் சங்கடத்தை கொடுத்திருக்கிறது துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *