இந்த நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், செய்தியாளர்கள் அங்கு சென்று செய்தி சேகரிக்கச் சென்றபோது, முதலில் `இந்த முட்டை நாங்கள் கொடுக்கவில்லை” என்று கூறிய சொர்ணமாரி, பின்பு `நாங்கள்தான் முட்டையைக் கொடுத்தோம்’ என்று கூறினார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் கேட்டபோது, ”அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை. குழந்தைகளுக்கு எதுவும் சொல்லித்தருவதும் இல்லை. முறையான குடிநீர் வசதி இல்லை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பல மாதங்கள் ஆகின்றன. HCL நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட RO குடிநீர் இயந்திரமும் LED டி.வி-யும் பயன்படுத்தாமலே உள்ளன. சிறுவருக்கான விளையாட்டு உபகரணங்களும் பழுதாகி உள்ளன. கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் உள்ளது” எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இது குறித்து குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடி மேற்பார்வையாளர் பத்மாவதியிடம் கேட்டபோது, ”அந்தப் பிரச்னைக்குரிய முட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் வந்தது. பெற்றோர்களிடம் திங்கள்கிழமைதான் மூன்று முட்டைகள் கொடுத்தோம். அதில் ஒரு முட்டையை உடைத்துப் பார்த்தபோது இறந்த கோழிக்குஞ்சு அழுகிய நிலையில் இருந்ததாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.