Business
oi-Velmurugan P
தூத்துக்குடி:தூத்துக்குடியில் ஹிண்டாய் நிறுவனம் கட்ட உள்ள 38000 கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளத்தை காக்கிடாநாடாவிற்கு மாற்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என்று டிஆர்பி ராஜா எச்சரித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த டிஆர்பி ராஜா, தற்போதைய தவெக அரசின் தொழிற்சாலை நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், “விழித்துக்கொள், தமிழ்நாடு அரசே!

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திமுக ஆட்சியில் மிகக் கடினமாகப் போராடிப் பெறப்பட்ட $4 பில்லியன் (சுமார் ₹38,000 கோடி) மதிப்பிலான எச்டி ஹூண்டாய் () மெகா கப்பல் கட்டும் தள திட்டத்தை, தற்போது ஆந்திரப் பிரதேச அரசு தீவிரமாகத் தன்வசம் இழுக்க முயற்சித்து வருகிறது!உண்மையில், தமிழ்நாடு இந்தப் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டது.
2.5 மில்லியன் ஜிடி கொள்ளளவு மற்றும் 15,000 நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை (TEFR) முடிந்து, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தேசிய கப்பல் கட்டும் அமைப்பமும் இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது.
கூடவே, மத்திய அரசே இந்தியாவின் ஐந்து திட்டமிடப்பட்ட கப்பல் கட்டும் மண்டலங்களில் தூத்துக்குடியை தான் மிக மேம்பட்ட மண்டலம் என்றும், முதலீட்டாளரை உறுதியாகக் கொண்ட ஒரே மண்டலம் என்றும் கூறுகிறது. இது அனைத்தும் நம் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் சிறப்பான உழைப்பிற்கு கிடைத்த சான்று.
ஆனால், ஆந்திர அரசு சும்மா உட்காரவில்லை!
காகினாடா பகுதிக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டுவர மாண்புமிகு திரு. நாரா லோகேஷ் அவர்கள் நேரில் கொரியா சென்று ஆந்திராவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்திகளின்படி ஆந்திர அரசு கூடுதல் சலுகைகளையும் வழங்கி வருகிறது.
நல்லவேளையாக, தமிழ்நாட்டைத் தேர்வு செய்த முதலீட்டாளரை வேறு மாநிலத்திற்கு மாற்றும் முயற்சிகளுக்கு மத்திய அரசு அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன ஒரு முரண்!
தமிழ்நாடு வென்றெடுத்த முதலீட்டைப் பாதுகாக்க டெல்லியே விழிப்புடன் இருக்கும்போது, இங்குள்ள தவெக அரசு கூடுதல் அவசரத்தையும் தீவிரத்தையும் காட்ட வேண்டும்.
எச்டி ஹூண்டாய் நிறுவனத்தைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வர திமுக மிகவும் பாடுபட்டது.
யாரோ ஒருவர் இந்தத் திட்டத்தைக் தட்டிப்பறிக்க முயலும் போது, தற்போதைய அரசு அசட்டையாக இருந்துவிடக் கூடாது!
மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களின் புத்திசாலித்தனத்தையும், அமைச்சர் நாரா லோகேஷின் கூர்மையான உழைப்பையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் சலிப்பின்றி உழைப்பவர்கள், டெல்லிக்கும் மிக நெருக்கமானவர்கள்!” இவ்வாறு திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
என்ன பிரச்சனை
இன்று ஆங்கில ஊடகம் ஒன்றில் வந்த செய்திகளின் படி, மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முக்கியமான பங்காளியாக இருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, தூத்துக்குடியில் புதிதாக அமையவிருக்கும் கப்பல் கட்டும் வளாகத்தில் ஒரு முக்கிய தளத்தை அமைப்பதற்காக தென்கொரிய நிறுவனமான எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் கோ லிமிடெட்டிற்கு தமிழக அரசு வழங்கியதை விட “அதிக சலுகைகளை” வழங்குவதாகக் கூறி, காக்கிநாடாவில் ஒரு கப்பல் கட்டும் தளத்தை அமைக்க ஆசைப்படுகிறாராம்.
நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டும் திட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு கொண்டு செல்வதற்காக நடந்த இந்த அதிகாரப் போட்டிகள், எச்டி ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளி இருக்கிறதாம். இருப்பினும், நாட்டின் கப்பல் கட்டும் லட்சியங்களை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ₹69,725 கோடி நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், இந்தியாவில் தூத்துக்குடியில் ஒரு தளத்தை அமைக்கவே உண்மையில் எச்டி ஹூண்டாய் முடிவு செய்துள்ளதாம். ஆனால் உலகின் இரண்டாவது பெரிய கப்பல் கட்டும் நிறுவனமான இதனை “கவர்ந்து இழுக்க” ஆந்திரப் பிரதேச அரசு மிகப்பெரிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதாம். ஆனால் நாட்டின் நலன் கருதி, இந்த திட்டத்தை தூத்துக்குடியில் இருந்து காக்கிநாடாவிற்கு மாற்றுவதை மத்திய அரசின் அதிகாரிகள் விரும்பவில்லையாம்.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத டெல்லி வட்டாரங்களில் உள்ள ஒருவர் கூறுகையில், “எச்டி ஹூண்டாய் நிறுவனம் தனது திட்டமிடப்பட்ட கப்பல் கட்டும் தளத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவிற்கு மாற்றுவதற்கு ஆந்திரப் பிரதேச அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது” என்றார். இந்த விவாதங்கள் ரகசியமானவை என்பதால் அவர் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.
நிறுவனத்தை ஈர்ப்பதற்காக ஆந்திரப் பிரதேச அரசு மேற்கொள்ளும் இந்த லாபி முயற்சி, சமீபத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாம். அப்போது, மாநில அரசு பின்பற்றும் இந்த முயற்சி “சரியல்ல” என்று மத்திய அரசின் அதிகாரிகள் கருத்து தெரிவித்ததாகத் தெரிகிறது. “பெரும் சிரமத்திற்குப் பிறகு, தூத்துக்குடி புதிய கப்பல் கட்டும் தொகுப்பில் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு முக்கிய கப்பல் கட்டும் தளத்தை உருவாக்க எச்டி ஹூண்டாய் நிறுவனம் சம்மதிக்க வைக்கப்பட்டிருக்கிறது.
இப்போது, ஆந்திரப் பிரதேச அரசு, ஒரு தளத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு வழங்கியதை விட சிறந்த சலுகைகளை வழங்குவதாக உறுதியளித்து, அவர்களை காக்கிநாடாவிற்கு கவர்ந்திழுக்க முயற்சி நடந்துள்ளது என இன்னொரு பெயர் வெளியிட விரும்பாத டெல்லி மேலிட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமையவிருந்த சில ஆலைகளை ஆந்திரா அதிக சலுகைகள் தருவதாக கூறி தட்டிப்பறித்தது. தொடர்ந்து தட்டி பறிக்கும் வேலைகளை செய்வதால், தமிழகத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

