ஏற்கனவே இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் பிரபுல் பட்டேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் பவாரை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு கட்சியின் இரு அணிகளையும் ஒன்றாக இணைப்பது குறித்து பேசினார். அதற்கு 10ம் தேதிக்கு பிறகு இது குறித்து பேசலாம் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். பிரபுல் பட்டேலும் 10ம் தேதிக்கு பிறகு சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து அஜித் பவார் மகன் பார்த் பவார் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக சரத் பவாரை சந்தித்து கட்சிகள் இணைப்பு குறித்து பேசியுள்ளார். இரண்டு நாட்களும் தலா இரண்டு மணி நேரம் இருவரும் பேசியுள்ளனர். இந்த சந்திப்பை தொடர்ந்து சரத் பவார் தனது கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், சசிகாந்த் ஷிண்டே, அமோல் கோல்ஹே, அனில் தேஷ்முக் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரை அழைத்து சுமார் மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இவர்களில் பெரும்பாலானோர், மறைந்த அஜித் பவாருடன் நடைபெற்ற கட்சிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஜெயந்த் பாட்டீல் தலைமை தாங்கினார். அஜித் பவார் இறந்தபோது ஆரம்பத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு தொடர்பாக அஜித் பவார் உயிரோடு இருந்தபோது எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை கூறி வந்தனர்.
ஆனால் இப்போது அவர்கள் இரு அணிகளும் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம் இரு அணிகளும் இணைந்த பிறகு கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்தும், மத்தியில் எந்த அணியோடு கூட்டணியில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது. இது குறித்து இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.