Tamilnadu
oi-Vishnupriya R
திருப்பத்தூர்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, காதலித்து மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த நபர், 6 மாதம் குடும்பம் நடத்திய நிலையில் அவருடன் சேர்த்து வைக்க கோரி காவல் நிலைய வாயிலில் அந்த பெண் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த மேல்மலையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி பெண் பவித்ராவை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பின்னர் அது காதலாக மலர்ந்தது.

இந் நிலையில் பெள்ளாச்சிக்கு சென்று பவித்ராவை சென்னைக்கு அழைத்து சென்று கோவில் ஒன்றில் வைத்து தாலி கட்டினாராம். இதையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பரின் வீட்டிக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அதாவது இவர்கள் வசிக்கும் வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமல் பவித்ராவை மறைத்து வைத்து குடும்பம் நடத்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் உடனடியாக வீட்டை காலி செய்யுமாறு கூறிவிட்டாராம்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து இருவரும் திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல ஊர்களுக்கு சுற்றி திரிந்து வந்துள்ளனர். வேறு எங்கும் வீடு கிடைக்காத நிலையில் பவித்ரா தனது சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்று தான் திருமணம் செய்து கொண்டதை தனது பாட்டி மற்றும் உறவினரிடம் தெரிவித்து தனது பாட்டி வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
ஆறு மாதமாக குடும்பம் நடத்திய நிலையில் பவித்ராவை கைவிட்ட லட்சுமணன், தனது சொந்த ஊரான ஆம்பூர் அருகே உள்ள மலையாம்பட்டு பகுதிக்கு திரும்பி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக பவித்ராவின் செல்போன் அழைப்புகளை தொடர்ந்து லட்சுமணன் ஏற்காமல் இருந்தாராம்.

இதனால் சந்தேகமடைந்த பவித்ரா லட்சுமணனின் சொந்த ஊரான ஆம்பூரை அடுத்த மேல்மலையாம்பட்டு பகுதிக்கு சென்று கணவரை அழைத்துள்ளார். அப்போதுதான் லட்சுமணனுக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் கணவருடன் வாழ வந்த பவித்ராவை லட்சுமணனின் தாய் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஆம்பூர் காவல் நிலையத்தில் பவித்ரா தஞ்சம் அடைந்த நிலையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பந்தப்பட்ட லட்சுமணனை வரவழைத்து அவரது குடும்பத்தாரையும் வரவழைத்து மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்துச் செல்லுமாறு கூறியதை லட்சுமணன் ஏற்று அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.