
வைகைச் செல்வன்
அதிமுகவில் ஏற்பட்ட அவமானம் காரணமாக மற்றும் எடப்பாடியார் மீது உள்ள அதிருப்தி காரணமாக விலகுகிறேன் என்று கூறியுள்ளார். அவர் அதிமுகவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பின்னர் 2012, அக்டோபர் 6 முதல் 2013, பிப்ரவரி 27 வரை தமிழ்நாடு அரசின் தலைமைக் கொறடாவாக செயல்பட்டு வந்தவர்.
அதனைத் தொடர்ந்து 2013, பிப்ரவரி 28 அன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் .அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா 2013 செப்டம்பர் 5 ஆம் தேதி வைகைச் செல்வனை பதவி நீக்கினார்.இந்நிலையில் வைகைச் செல்வன் அதிமுகவிலிருந்து விலகுகிறேன் என்ற அறிவிப்பு அக்கட்சியின் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். இயக்கமும் கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை என்று எடப்பாடியாரை விமர்சித்து வைகைச் செல்வன் அதிமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்கிறேன்.
ஒரு தலைவர் தானே அழிந்தால் கூட தனது கொள்கைகளும், இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை. திமுகவோடு இணைந்து ஆட்சியமைக்க திட்டமிட்டதன் மூலம், திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து அதிமுக சமரச போக்கில் போனதால் தனது அடையாளத்தை இழந்து விட்டது. சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதன் காரணமாகவும், தனது வெற்றிப் பாதையில் இருந்து அதிமுக விலகிச் சென்று விட்டது.
மேலும், தேர்தல் களத்தில் நான் தனித்து விடப்பட்ட நிலையிலும் கூட, கழகத்திற்காக தேர்தல் பரப்புரையாற்றினேன். ஆனால், மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் உணாந்து கொண்டேன்.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று என்கிற வள்ளுவப் பேராசானின் வார்த்தைகளுக்கு நான் கீழ் படிகிறேன். மாணவப் பருவம் தொட்டு ரத்தமும், சதையுமாக இருந்து இந்த இயக்கத்தோடு பணியாற்றி தற்போது விலக வேண்டிய சூழ்நிலையை எண்ணிப் பார்க்கையில், என் மனதில் ஏற்படும் கடுமையான வலியை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை.
நேரம் வருகிற போது இன்னும் இதுகுறித்து பேசுகிறேன்.
‘புதிய இடத்தில் நடுவதற்கு புடுங்கிப் போன செடியில் இருக்கும் பழைய மண்ணைப் போல’ இந்த இயக்கத்திற்காக ஆற்றிய என் பழைய நினைவுகளை என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை என்று கட்சிக்குள் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக விலகுகிறேன் என்று அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமான நிலையில் இவரும் தவெகவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.