தேனியிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் சாலையில், சுமார் 9 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது, தீர்த்தத்தொட்டி எனும் பேருந்து நிறுத்தம்.
இதன் அருகிலேயே கொட்டக்குடி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது ‘விருப்பாட்சி’ ஆறுமுக நயினார் கோயில்.
நாக தோஷம் தீர்க்கும் தலமாகத் திகழும் இந்த ஆலயத்தில் மூலவரான ஆறுமுக நயினாரின் அருகில், இடதுபுறம் சிறிய விக்கிரகமாக ஏழுதலை நாகம் புடைசூழ அருள்மிகு நாக சுப்ரமணியர் காட்சி தருகிறார்.
அதேபோல், இந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் செல்வகணபதிக்கு அருகில் நாககணபதி வீற்றிருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள் நாகசுப்ரமணியருக்கும், நாக கணபதிக்கும் சிறப்பு பாலபிஷேகம் செய்வதால் தோஷம் நீங்கப் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிவலிங்க பாணத்தில் ருத்ராட்ச மாலை ஆறுமுக நாயனாரின் இடது புறத்தில் காட்சியளிக்கிறார், ருத்ராட்ச சிவன். இங்குள்ள ருத்ராட்ச சிவபெருமான் குருபகவான் அம்சத்தில், சிரசில் ருத்ராட்ச மாலை அணிந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம் பெறுபவர்கள், இங்கு வியாழக்கிழமைகளில் ருத்ராட்ச சிவபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர்.
ஆறுமுக நயினார், நாக சுப்ரமணியர், செல்வகணபதி, நாக கணபதி, ருத்ராட்ச சிவனார் ஆகிய தெய்வங்களுடன் முன்னோடி கருப்பரையும் இங்கே தரிசிக்கலாம்.