தேனி மாவட்டம், தக்கம்பட்டியில் அமைந்துள்ள மாவட்டச் சிறையிலிருந்து தப்பித்த 17 சிறைக் கைதிகளில் ஏற்கெனவே நான்கு பேர் பிடிபட்டு, கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது லிங்க பிரசாத் என்பவரை தேனி மாவட்டம், கானா விளக்கைச் சேர்ந்த சின்ன காளை என்பவரின் ஷேர் ஆட்டோவில் செல்லும்போது காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைதுசெய்திருக்கிறார்கள்.
கைதியைப் பிடித்தபோது உடன் இருந்த ஆட்டோ டிரைவர் சின்ன காளை சம்பவம் குறித்து கூறுகையில்,
“வழக்கம்போல சவாரி ஏற்றிக்கொண்டு போகும்போது, பயணியோடு பயணியாக வந்தவர்தான் லிங்க பிரசாத். இவர் ஆட்டோவில் ஏறும்போது, `அண்ணே கானா விளக்கில் இறங்கிக்கிறேன். உங்களுக்கு ஒரு ஆளுக்கு போன் போட்டு கூகுள் பே-ல காசு போடுறேன்… என் கையில காசு இல்ல”ன்னு சொல்லிட்டு ஆட்டோல ஏறினார். அதுக்கு நான், தம்பி என்கிட்ட இப்பதான் போன்ல இருந்து காசு வச்சு டீசல் போட்டேன்னு சொல்லி, கைல காசு கொடுக்கச் சொன்னேன்.

போகும்போதே என் பக்கத்துல முன் சீட்டுல உக்காந்துதான் பேசிக்கிட்டே வந்தார். வரும் வழியிலேயே மெடிக்கல் காலேஜுக்கு பக்கத்துல இருக்க மருந்து குடோன் கிட்ட ஒரு ஏட்டையா வந்து வழிய மறச்சு நிப்பாட்டி, என் பக்கத்துல உக்காந்த பையனைப் பிடிச்ச அப்பதான் தெரிஞ்சது, அவன் சிறைக் கைதின்னு. அப்படியே ஆட்டோல வச்சு தக்கம்பட்டி சிறைக்கு நானும் போலீஸ்காரங்களும் இங்க கூட்டிட்டு வந்துட்டோம்” என்றார்.