உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணர்! – வரலாறு மீட்டெடுத்த இந்திய மருத்துவர் ரூபா பாய் ஃபர்தூஞ்சி | The Forgotten Story of the World’s First Female Anesthetist

Spread the love

பெண்களுக்கு உயர்கல்வி மற்றும் மருத்துவப் பயிற்சிக்கான வாய்ப்புகள் பல இடங்களில் கட்டுப்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவில் தொடங்கி, ஐரோப்பாவில் தொடர்ந்த அவரது கல்வி பயணம் அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையைச் சென்றடைந்தது. ரூபா பாய் 1889 முதல் 1917-ஆம் ஆண்டு வரை ஐதராபாத்தில் உள்ள பிரிட்டிஷ் ரெசிடென்சி மருத்துவமனை, அப்சல்கஞ்ச் மருத்துவமனை, விக்டோரியா ஜெனானா மகப்பேறு மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் பணியாற்றினார்.

மயக்க மருந்தின் பாதுகாப்பு குறித்து மருத்துவ உலகில் விவாதங்கள் நிலவிய அக்காலத்தில், மயக்க மருந்து வழங்கும் பணியில் மட்டும் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் அறிவியல் அடிப்படையிலான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளின் மூலம் அதன் பயன்பாட்டை மேம்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். 1920-ஆம் ஆண்டு ஐதராபாத்திலுள்ள சாதர்காட் மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதன் பின்னர் மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு, அவர் எங்கு வாழ்ந்தார், எப்போது மறைந்தார் போன்ற எந்தவொரு தகவலும், புகைப்படங்களும் வரலாற்றுப் பதிவுகளில் இல்லை. அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் போலவே அவரது பிற்கால வாழ்க்கையும் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது.

ரூபா பாய் ஓய்வு பெற்ற பின்னர், அவரது உறவினரான ஹர்முஸ்ஜி காவ்ஸ், அவருடைய மூன்று அசல் சான்றிதழ்களையும் சில தனிப்பட்ட கடிதங்களையும் பாதுகாத்து வைத்திருந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ வரலாற்று அறிஞர் டாக்டர்.நாராயணா ஆலா, வெளியிட்ட குளோரோஃபார்ம் ஆணையம் குறித்த வரலாற்று கட்டுரையில் வெளியான குழு புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில் இடம்பெற்றிருந்த இந்தியப் பெண்மணி ரூபா பாய் என்பதும் அடையாளம் காணப்பட்டது.

இதன் பின்னர் ஹர்முஸ்ஜி காவ்ஸ் தன்னிடம் பாதுகாப்பாக இருந்த ரூபா பாயின் சான்றிதழ்களையும் கடிதங்களையும் நாராயணாவிடம் ஒப்படைத்தார். பின்னர் அவை ஐதராபாத்திலுள்ள இந்திய மருத்துவ மரபியல் தேசிய நிறுவனத்தின் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டன. மீட்கப்பட்ட ஆவணங்களில் குளோரோஃபார்ம் ஆய்வுகளில் ரூபா பாய் பங்கேற்றதைப் பதிவு செய்த எட்வர்ட் லாரியின் சான்றிதழ், நோய்நாடலியல் கல்விக்கான சான்றிதழ், எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பெற்ற கல்வித் தகுதிக்கான சான்றிதழ், அன்னி பெசன்ட் வழங்கிய பரிந்துரைக் கடிதம் மற்றும் ஏடன் துறைமுகத்தில் இருந்து எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

1987-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற சர்வதேச மயக்க மருந்து வரலாற்று மாநாட்டின் குறிப்புகளோடு இந்த ஆவணங்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்ட பிறகே, ரூபா பாய் உலகின் முதல் தகுதிபெற்ற பெண் மயக்க மருந்து நிபுணர் என்ற வரலாற்றுச் சிறப்பு பரவலாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஐதராபாத்தில் தொடங்கி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா வரை தொடர்ந்த ரூபா பாய் ஃபர்தூஞ்சியின் அறிவுத்தேடல், அவரது விடாமுயற்சியையும் மருத்துவ முன்னோடிப் பயணத்தையும் வெளிப்படுத்துகிறது. காலத்தால் மறைக்கப்பட்ட அவரது வரலாற்றை ஆவணங்கள் மீண்டும் உலகிற்கு அறிமுகப்படுத்தின. வரலாறு, வரலாற்றை மீட்டெடுத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *