இதன்படி தாணுமாலயக் கடவுள் சீதனப் பொருள்களை முதலில் அனுப்பினார். ஐந்து மைல் தூரத்தைக் கடக்க நள்ளிரவிலேயே புறப்பட்டார். உடனே நாரதர் சேவல் உருவெடுத்து உதயத்துக்கு அடையாளமாகக் கூவினார். அதனால் முகூர்த்த நேரம் தவறி விட்டதாகக் கருதிய தாணுமாலயக் கடவுள், மணமேடைக்குச் செல்லாமல், சுசீந்திரத்துக்கே திரும்பிவிட்டாராம்.
திருமணம் தடைப்பட்டதால் கோபம் கொண்ட குமரி பகவதி தனக்கு வந்த சீதனப் பொருள்களை கடலில் வீசி எறிந்தாள். அவையே குமரிக் கரையில் ஏழு வண்ண மணலாகவும், குன்றுகளாகவும் பரவிக் கிடக்கின்றன என்கிறார்கள். இதன் பின்னர், ரெளத்திரமாகத் திகழ்ந்த தேவி, பாணாசுரனை வதைத்தாள் என்கிறது புராணம்!
குமரிக் கோயிலில் பகவதியம்மனின் வலக் கரத்தில் ருத்திராட்ச மாலையும், இடக் கரத்தை தொடை மீது வைத்தும் நின்றவாறு தவக் கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறாள். தலைக் கிரீடத்தில் பிறைச் சந்திரனும், மூக்கில் வைர மூக்குத்தியும் ஜொலிக்கின்றன.

குமரி பகவதிக்கு கன்னி தெய்வம், அபர்ணா, கன்னிகா பரமேஸ்வரி, பகவதி அம்மன் என்ற பெயர்களும் உண்டு. பண்டைய காலத்தில் இவளை சங்கரி, கௌரி, ஆர்யா, சாமரி, குமாரி, சூலி, நீலி, செய்யாள், கொற்றவை ஆகிய பெயர்களாலும் அழைத்தனராம்.
பகவதி விக்கிரகத்தின் மேல் பகுதி சொர சொரப்பாகக் காணப்படுகிறது. இதை ருத்திராட்ச விக்கிரகம் என்பர். கொடிமரம் அருகில் உள்ள கல்வெட்டு, இந்த விக்கிரகத்தை ‘ருத்திராட்ச விக்கிரகம்’ என்கிறது.
இங்கு வந்த அகத்தியர், உக்கிரமான துர்கையைச் சாந்தமான கன்னி வடிவில் தரிசிக்க விரும்பினார். அதை உணர்ந்த தேவி, கன்யாகுமரி அம்மனாக கோயில் கொண்டு அருள்கிறாள் என்பது ஐதிகம். குமரி அம்மனின் மூக்குத்தி மகிமை மிக்கது.