Cricket
oi-Yogeshwaran Moorthi
பெங்களூர்: துலீப் டிராபி தொடரில் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இத்தனை நாட்களாக பேட்டிங்கில் மட்டுமே திறமையை வெளிப்படுத்தி வந்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் வீரராக உருவெடுத்து வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதிலேயே இந்திய டி20 அணிக்குள் வந்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, அடுத்த ஆண்டில் ஒருநாள் அணியிலும் இடம்பிடிப்பார் என்று பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு பின் வைபவ் சூர்யவன்ஷி இந்திய ஒருநாள் அணி செட்டப்பிற்குள் கொண்டு வரப்படலாம்.

இருப்பினும் வைபவ் சூர்யவன்ஷி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே ஜாம்பவான் வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதற்கான பாதையை பிசிசிஐ நிர்வாகம் அமைத்திருக்கிறது. துலீப் டிராபி தொடரில் வடக்கு மண்டல அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வைபவ் சூர்யவன்ஷி, அந்த அணியின் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் வடக்கு மண்டல அணி 467 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய வடகிழக்கு மண்டல அணி வெறும் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு அணி மீண்டும் களமிறங்கியது.
2வது இன்னிங்ஸில் வைபவ் சூர்யவன்ஷியும் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். முதல் ஓவரிலேயே கிஷன் 25 ரன்களிலும், லெம்டூர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வெறும் 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வைபவ் சூர்யவன்ஷி அசத்தினார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் ஸ்பின் பவுலிங்கில் வைபவ் சூர்யவன்ஷி ஆர்வமுடம் இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இறுதியாக வடக்கு மண்டல அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி இப்போதே உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் பவுலிங் செய்ய தொடங்கினால், அடுத்த 5 ஆண்டுகளில் தரமான ஸ்பின்னராகவும் உருவாக முடியும். இதனால் வைபவ் சூர்யவன்ஷி கொஞ்சம் கொஞ்சமாக பவுலிங் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் வரத் தொடங்கியுள்ளன.