” ஐயோ லட்சுமி! எந்தெய்வமே !! என்னாச்சு உனக்கு? எப்பிடியம்மா நடந்தது ?எங்குடும்பத்தை காப்பாத்தின குலதெய்வம் நீ தானே !எங்க வீட்டு மகாலட்சுமி அம்மா !டேய் பாலா, ஈஸ்வரா,நடராசு, வெங்கிடு உங்களுக்கு எல்லாம் நான் குடுத்த பாலை விட நம்ம லட்சுமி குடுத்த பால் தாண்டா எச்சா(அதிகமா)இருக்கும். ஐயோ என்ற கோமாதா இனி நா என்ன செய்யப் போறேன்னு தெரியலையே?அவரது அழுகையின் உச்சகட்ட வீரிய சத்தம் கிழக்கே செம்மிபாளையம், மேற்கே காரணம்பேட்டை,தெற்கே ஆறாக்குளம்,வடக்கே கோடாங்கிபாளையம் வரைக்கும் கேட்கும் போல என கூடி நி நின்றோருக்கு வருத்தம் வந்தது. லட்சுமியின் தலையை மடிமேல் வைத்துக் கொண்டதால் ஏற்பட்ட இரத்தக்கறை அவரது
நீல வாயில்சேலை, வெள்ளை ரவிக்கையில்( மில் யூனிபார்ம்) நி நிறையவே படிந்தது. அவரது மகன்களும் தேம்பி தேம்பி அழுதனர். இதற்கிடையில்
பாலாவின் அப்பா தனது தாய் மற்றும் பொங்கலூரம்மா ஆகியோரை இ.எஸ்.ஐ… ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல மற்றவர்கள் உதவினார்கள்.
பசங்களோட அழுகையும் கன்றுக்குட்டியின் பரிதாபமான முகமும் இளமதியை என்னவோ செய்தது. இதற்கிடையில் பேத்தியை தேடி கண்டுபிடித்த சீரங்கம்மா ஆத்தா “பயப்படாம வா ,வீட்டுக்கு போலாம் “என்று அழைத்து சென்றார்.
“ஆத்தா! அப்ப நாம சாணி எடுக்க வேண்டாமா?”என இளமதி கேட்டாள்.
“ஒண்ணும் வேண்டா , வா,கூடையை எடுத்துட்டு வூட்டுக்கு போலாம். “…..இது ஆத்தாவின்பதில்.
“ஆத்தா! இன்னோரு
சந்தேகம் எனக்கு!……இளமதி
“பேசாம வரமாட்டியா? சரி சரி என்ன சந்தேகம்?..”…ஆத்தா
“இல்லே! பாலாவோட அம்மாவுக்கு யூனிபார்ம் சேலை ஜாக்கெட்டெல்லாம் லட்சுமி மாட்டோட இரத்தக்கறை ஆயிருச்சே! அது போயிடுமா? நாளைக்கு அவங்க எப்படி மில்லுக்கு யூனிபார்ம் கட்டிட்டு போவாங்க? “
ஆத்தாவுக்கு அழுவதா இல்லை பேத்தியை திட்டுவதா
எனத்தெரியவில்லை . “அதைப்பத்தி எல்லாம் நெனைச்சு நீ கவலைப்படாதே. அவங்ககிட்ட நிறைய சேலை இருக்கும். துணியில இருக்கற இரத்தக்கறையும் நல்லா
தொவைச்சா போயிரும், ஆனா அந்த அம்மிணி மனசுல பதிஞ்ச லட்சுமி மாட்டோட பால் கறை மட்டும் இந்த ஜென்மத்துக்கும் போகவே போகாது,” என்றபடி கூடையை ஒருகையில்
நன்றாகப் பிடித்துக்கொண்டு இளமதியின் கையை மறுகையில் பிடித்தார்..
ஆத்தாவின் கையை உதறிய இளமதி ‘ஒரு நிமிஷம் இரு ஆத்தா ,’என்று சொல்லிவிட்டு கேட் அருகே வாட்ச்மேன் கேபினுக்கு வேகமாக ஓடினாள்….
“மாமா! அந்தப்பாட்டு முடியல இல்லியா, இப்ப சொல்றேன் கேளுங்க….”
” வேண்டாங்கண்ணூ! இப்ப ஆத்தா கூட வீட்டுக்குப் போ, நாளைக்கு கேக்கறோம்’, என்றார் சென்னியப்பன்..
“ஊஹூம் ..இல்லையில்லை ,இப்பவே சொல்றேன்.”.அடம் பிடித்தாள் இளமதி.
ஏதோ சொல்ல வந்த சென்னியப்பனை கையமர்த்தி விட்டு “நீ சொல்லு சாமி “என்றார் வாசுதேவன்.
சரி மாமா! சொல்றேன்.
ரோட்டுலே கிடக்குது வெள்ளைப்பசு!
அங்கே தவிச்சு நிக்குது கன்னுக்குட்டி!
மூச்சே இல்லாம அந்தவெள்ளைப்பசு!
பேச்சே வராம இந்த கன்னுக்குட்டி!
நாவால் நக்குமுன்னு வெள்ளைப்பசு கிட்ட
நல்லா ஒட்டி உரசுது கன்னுக்குட்டி!
முத்தம் தருமுன்னு வெள்ளைப்பசுவின் மூஞ்சியில் தன் மூக்கைத் தேய்க்குது கன்னுக்குட்டி!
ஏம் மாமா! வெள்ளைப்பசுவும் அந்தக்கன்னுக்குட்டியும் ரெண்டுமே ரொம்ப ரொம்ப பாவந்தானே மாமா!?
என்று பரிதாபமாக கேட்ட இளமதியின் கேள்விக்கு வாட்ச்மேன் மாமாக்களின் கண்ணீர்த் துளிகளே பதிலானது…….பதிவானது……..