நானா படேக்கர் மறைவு… “தி ஈவில் டெட்” எனக் கூறிய தனுஷ்ரீ தத்தா! வைரலாகும் வீடியோ – Kumudam

Spread the love

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேக்கர் 75 வயதில் காலமான நிலையில், அவருக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் எழுந்த #MeToo குற்றச்சாட்டுகளில் முக்கியமாகப் பேசப்பட்ட நடிகை தனுஷ்ரீ தத்தா, தற்போது அவரது மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

நானா படேக்கர் கோவாவில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், இந்த செய்தியை தான் கேட்டதாக தனுஷ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோவில் தெரிவித்துள்ளார்.

“நானா படேக்கர் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். இன்று எனக்கு வேலை இருக்கிறது. லக்னோவில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருக்கிறேன். அதில்தான் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இன்று இதெல்லாம் நடக்க வேண்டிய ஒரு வித்தியாசமான நாளாக இருக்கிறது. லக்னோவில் எனக்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. அதற்காக எனது நாள் முழுவதையும் திட்டமிட்டிருந்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

“மீடியா முழுவதும் இதைப் பற்றித்தான் பேசுமோ?”

தனுஷ்ரீ தத்தா மேலும் கூறுகையில், “இப்போது மீடியாக்கள் முழுவதும் ‘தி ஈவில் டெட்’ பற்றித்தான் ஆர்வமாக இருக்கும் என்று கவலைப்படுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில், நானா படேக்கர் மரணம் குறித்து தான் உடனடியாக முழுமையான கருத்தை தெரிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். “என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்பதை முதலில் நான் புரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு எனது கருத்தைத் தெரிவிப்பேன். அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் எனது இரங்கல்கள்” என்று தனுஷ்ரீ தெரிவித்துள்ளார்.

நானா படேக்கர் – தனுஷ்ரீ தத்தா சர்ச்சை என்ன?

2008-ம் ஆண்டு வெளியான ‘Horn Ok Pleassss’ படத்தின் படப்பிடிப்பின்போது நானா படேக்கர் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக தனுஷ்ரீ தத்தா குற்றம்சாட்டியிருந்தார். தனக்கு தனிப்பட்ட நடனக் காட்சிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், படத்தில் இல்லாத நெருக்கமான காட்சியை நானா படேக்கர் செய்யச் சொன்னதாகவும், அவர் தனது கைகளைப் பிடித்து தன்னைத் தள்ளியதாகவும் தனுஷ்ரீ கூறியிருந்தார்.

இந்த விவகாரம் 2018-ம் ஆண்டு இந்தியாவில் #MeToo இயக்கம் தீவிரமடைந்தபோது மீண்டும் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது நானா படேக்கர் மட்டுமின்றி கணேஷ் ஆச்சார்யா, விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீதும் தனுஷ்ரீ குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

நானா படேக்கர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 2019-ம் ஆண்டு மும்பை போலீசார் இந்த வழக்கில் அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கை முடித்தனர். 2025-ம் ஆண்டு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் வழக்கை முடித்து வைத்தது. ஆனால், குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது குறித்து நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை.

“பல ஆண்டுகளாக துன்புறுத்தப்படுகிறேன்” – தனுஷ்ரீ

இதற்குப் பிறகும் தனக்கு பிரச்னைகள் தொடர்ந்ததாக தனுஷ்ரீ தத்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார். 2022-ம் ஆண்டு, தன்னை பாலிவுட்டில் உள்ள சிலர் குறிவைத்து துன்புறுத்துவதாகவும், தன்னைப் பின்தொடர்வதாகவும் அவர் சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். மேலும், உஜ்ஜைன் சென்றபோது கார் விபத்தில் சிக்கியதாகவும், தனது வீட்டில் பணியாற்றிய பெண் ஒருவர் மூலம் தனக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

மேலும், தனது காரின் பிரேக்குகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், உணவில் விஷம் கலக்கப்பட்டதாகவும் தனுஷ்ரீ குற்றம்சாட்டியிருந்தார். இவை அவரது சொந்த குற்றச்சாட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2025-ம் ஆண்டு கண்ணீர் மல்க வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், 2018-ம் ஆண்டு முதல் தனது வீட்டிலேயே துன்புறுத்தல் தொடர்வதாகவும், உடல்நலப் பிரச்னைகளால் தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

நானா படேக்கரின் மறைவு

இதற்கிடையே, 75 வயதான நானா படேக்கர் மாரடைப்பு காரணமாக கோவாவில் உயிரிழந்தார். மருத்துவர்கள் சுமார் 45 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘நட்சம்ராட்’, ‘வெல்கம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நானா படேக்கர், தமிழில் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ரஜினிகாந்தின் ‘காலா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நானா படேக்கரின் மறைவுக்கு தனுஷ்ரீ தத்தா தெரிவித்த இந்த சுருக்கமான எதிர்வினை, பல ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்திய #MeToo சர்ச்சையை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *